யார் இந்த கமலா ஹாரிஸ்?

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சி சார்பில், ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுவார் என ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

தற்போது 55 வயதாகும் கமலா ஹாரிஸ் தாயார் இந்தியாவை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். இதன் மூலம், துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் நபர் என்ற பெருமை கமலா ஹாரீசுக்கு கிடைத்துள்ளது.

கடந்த 1964ம் ஆண்டு ஆக்லாந்தில் பிறந்த கமலா ஹாரீசின் தாயார் ஷியாமளா கோபாலன் ஹாரீஸ். மார்பக புற்றுநோய் விஞ்ஞானி. தந்தை டொனால்ட் ஹாரீஸ். ஸ்டான்போர்டு பல்கலையில் பொருளாதார பேராசிரியராக இருந்தார். கமலாஹாரீசின் சகோதரி, மாயா ஹாரீஸ், கடந்த 2016 ல் அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியில் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக செயல்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்தார்.

கடந்த 1998 ம் ஆண்டில் பிரவுன் பல்கலையில் பட்டப்படிப்பு முடித்த பின்னர், கலிபோர்னியா பல்கலையில் சட்டப்படிப்பு முடித்தார். இதன் பின்னர் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் பணிபுரிந்தார். அவர் கிரிமினில் பிரிவு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2003 ல், சான் பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்னியாக தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட அட்டர்னியாக இரண்டு முறை பணியாற்றிய பின்னர், கடந்த 2011 ல் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக தேர்வு பெற்றார். இதன் மூலம் அந்த பதவிக்கு தேர்வு பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.

2017 ல் கலிபோர்னியாவிலிருந்து செனட்டராக பதவியேற்றார். இனவெறிக்கு எதிரான வழக்குகளில் கமலா ஹாரீஸ் ஆஜராகியுள்ளார். ஓரின சேர்க்கையார் திருமணங்களுக்கு ஆதரவு அளித்த அவர், கருப்பினத்தவர் வாழ்க்கை விவகாரம் இயக்கத்திற்கு ஆதரவாக பேசி பலரின் ஆதரவை பெற்றுள்ளார். கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது குறித்தும் பேசியுள்ளார். அதிபர் டிரம்ப்பின் கொள்கைகள் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

கலிபோர்னியாவின் முதல் பெண் அட்டர்னி ஜெனரல், அமெரிக்க செனட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தெற்காசிய பெண், இரண்டாவது கறுப்பின பெண் என்ற பெருமையும் கமலா ஹாரீசுக்கு உண்டு. அதிபர் வேட்பாளருக்கான களத்தில் முதலில் கமலா ஹாரீசும் இருந்தார். பின்னர், டிசம்பர் மாதம், ஜோபிடனுக்கு ஆதரவு தெரிவித்து போட்டியில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார்.