யானை மீது அமர்ந்து தேசிய பூங்காவை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி!

அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவை பிரதமர் மோடி யானை மீது அமர்ந்து சுற்றிப்பார்த்தார். இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று ரூ.18,000 கோடி மதிப்பிலான திட்டங்களை துவங்கி வைக்கிறார். ஹோலோங்கா பத்தரில் புகழ்பெற்ற அஹோம் போர் வீரர் ‘லச்சித் போர்புகானின்’ 84 அடி உயர சிலையை திறந்து வைக்கிறார். பின்னர், அவர் போதாரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

 

இந்நிலையில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்காவை பிரதமர் மோடி சுற்றிப் பார்த்தார். பிரதமர் மோடி யானையில் சவாரி செய்தார். பூங்கா இயக்குனர் சோனாலி கோஷ் மற்றும் மூத்த வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அங்கு உள்ள புலிகள் சரணாலயம் மற்றும் பூங்காவின் மத்திய கோஹோரா மலைத்தொடரின் பகுதியை பிரதமர் மோடி ஜீப் மூலம் பார்வையிட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.