தேசிய அளவில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை பா.ஜ.,துவக்கியது. “மோடியைத் தேர்ந்தெடுங்கள்” என்ற பெயரில் 2 நிமிட வீடியோவை பா.ஜ., சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சி தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ., இம்முறையும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று ஆயத்தமாக செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் பா.ஜ.,வின் முதல் பிரசார வீடியோவை பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார். வீடியோவில், ராமர் கோயில் திறப்பு, நிலவில் சந்திரயான் விண்கலம் இறங்கியது உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கட்சித் தொண்டர்கள் அனைவரும் மக்களின் உணர்வுடன் தங்களை எதிரொலிக்க வேண்டும். இந்த முக்கியமான பிரசாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் பரப்ப வேண்டும் என்றும் நட்டா வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.