மேற்கு வங்காளத்தில் ஸ்வயம்சேவர்கள் மேற்கொண்ட நிவாரணப் பணிகள்

அண்மைக் காலமாக கனமழை, நிலச்சரிவு போன்றவை அதிகரித்து வருகின்றன. அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் கனமழை மேற்கு வங்காளத்தை புரட்டிப் போட்டது. டார்ஜிலிங் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் 261 மில்லி மீட்டர் மழை கொட்டியது. இது மிக கனமழை என்று வானிலை ஆய்வு மையமே தெரிவித்துள்ளது. டார்ஜலிங் மாவட்டத்தில் உள்ள மிரிக் பகுதியில் மட்டும், 13 சடலங்கள் மீட்கப்பட்டன. சுமார் 100 இடங்களில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. வங்காளத்துக்கும், சிக்கிமுக்கும் இடையிலான தொடர்பு அடியோடு நிர்மூலமாகி விட்டது. கூர்காலாந்து பிராந்திய நிர்வாகம், மறு அறிவிப்பு வரும் வரை எல்லா சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. வடக்கு வங்காளத்தில் அக்டோபர் 4ம் தேதி இரவு 12 மணி நேரத்துக்குள்ளாக 300 மில்லி மீட்டர் மழை கொட்டியுள்ளது. இது வரலாறு காணாத கனமழையாகும்.

கூச் பிஹாரில் 192 மில்லி மீட்டர் மழையும், ஜல்பைகுரியில் 172 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு வங்காளம் கனமழையாலும், நிலச்சரிவாலும் தத்தளித்த வேளையில் சங்க ஸ்வயம்சேவகர்கள் அங்கு விரைந்து சென்றார்கள். அர்ப்பணிப்புடன் அயராது சேவை செய்தார்கள். இது ஒரு புறம் இருக்க பாஜக எம்.பியும், பழங்குடியின தலைவரான ககன் முர்மு, ஜல்பைகுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது அவரை திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் சரமாரியாக தாக்கினார்கள். அவரது தலையிலிருந்து ரத்தம் வழிந்தோடியது. திரிணாமுல் காங்கிரஸ் ஒருபோதும் திருந்தாது என்பதையே இது வெளிப்படுத்தியுள்ளது.

டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச் பிஹார் ஆகிய பகுதிகளில் அக்டோபர் 5ம் தேதியன்றே நிவாரணப் பணிகளை ஸ்வயம்சேவகர்கள் தொடங்கி விட்டார்கள். கடந்த காலத்திலும் இத்தகைய நிவாரணப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் அவர்களுக்கு உள்ளதால், அவர்களது சேவை தங்கு தடையின்றி தொடர்ந்தது. ஏறத்தாழ 180 கிராமங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் ஸ்வயம்சேவகர்கள் முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்கள்.

10 குவிண்டால் அரிசி, 8 குவிண்டால் மைதா, 5 குவிண்டால் பருப்பு ஆகியவற்றை ஸ்வயம்சேவகர்கள் விநியோகித்தார்கள். அதுமட்டுமல்லாமல் 10,000 மேகி பொட்டலங்களையும் வழங்கினர். உணவு சமைப்பதற்கான பாத்திரங்களையும் ஸ்வயம்சேவகர்கள் விநியோகித்தனர். 1,000 தார்ப்பாய்கள், 500 போர்வைகள், 100 கிலோ பிளிச்சிங் பவுடர் ஆகியவற்றையும் விநியோகித்த ஸ்வயம்சேவகர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். எங்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் முதலில் பாதம் பதிப்பவர்கள் ஸ்வயம்சேவகர்களே என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு மட்டுமல்லாமல் தேசத்துக்கே பெருமை சேர்க்கிறது என்றால் அது மிகையன்று.

ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி