மூன்று அண்டை நாடுகள் ஹிந்துக்களுக்கு செய்த கொடுமை தீர்க்கும் சட்டத்தைப் பழிப்போர் சதிகாரர்களே!

நம் நாட்டின் சாபக்கேடு நம் நாட்டிலுள்ள எதிரிகளின் எதிர்மறை மனநிலை, – திசை திருப்பும் செயல்பாடு. – ஓட்டு வங்கி அரசியல், குறிப்பாக மைனாரிட்டிகளை தாஜா செய்யும் போக்கு! இதனுடைய தொடர்ச்சி தான் தற்போது சட்டமாகியுள்ள இந்திய குடியுரிமைச் சட்டத்தின் 2019ம் ஆண்டு திருத்தத்தின் மீது வைக்கப்பட்ட வாதங்கள், அல்ல அல்ல,  குற்றச்சாட்டுகள்.

விஜயபாரதம் வாசகர்கள் மற்ற பத்திரிகை வாசகர்களை விட அதிக புத்தசாலிகள். தீவிர தேச பக்தர்கள்.  இந்த 2019 திருத்தத்தின் நோக்கம், அதன் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உள்நோக்கம், இந்த சட்டம் கடந்து வந்த பாதை ஆகியவற்றை நாம் பாடம் படிப்பது போல் தெரிந்து கொண்டால், பொய், புனைசுருட்டு, புரட்டு வாதிகளின் வாதங்களுக்கு எதிரான ஆயுதமாகஇந்த ”ஞானத்தை”  நாம் பயன் படுத்த முடியும். கொஞ்சம் பொறுமையாக, ஆழமாக படிப்பீர்கள் என நம்புகிறேன்.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஏன் இப்படி கொந்தளிக்கணும்? அஸ்ஸாம் மாநிலத்தின் சில பகுதிகளில் இந்த திருத்தத்திற்கு எதிரான வன்முறை, போராட்டம், கலவரம்! உள்ளுர் மக்களே இதை எதிர்க்கிறார்களே! ஆகவே இச்சட்டம் ஒரு தலைப்பட்சமானது தானே என்பது சரியா?  இந்தச் சட்டம் முதன் முதலில் 1955ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதற்குப்பின் 1986,1992,2003,2005,2015 ஆகிய ஆண்டுகளில் திருத்தப் பட்டு இன்று  2019ல் திருத்தப் பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் ஆட்சியில் 3 முறையும் பாஜக ஆட்சியில் 3 முறையும் திருத்தப்பட்டது. இந்தமுறை செய்யப்பட்ட திருத்தத்திற்கு எழுப்பிய கூச்சல் போல முந்தைய முறைகளில் எழுப்பப்பட வில்லை ஏன்?

மேற்கு பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தானிலிருந்து கொடூரமாக விரட்டப்பட்ட ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த, ஜைன, பார்சிகளுக்கு அடைக்கலமும் குடியுரிமையும் கொடுக்க 2003ம் ஆண்டு வாஜ்பாய் அரசு இச்சட்டத்தை திருத்தியது. எதிர்க்கட்சிகள் கூக்குரல் இடவில்லை. இதே காரணத்தைக்காட்டி அதாவது ஹிந்துக்களுக்கு குடியுரிமை கொடுக்க, வகைசெய்யும் படி ஓராண்டுக்கால கெடுவை நீட்டித்து 2005ல் மன்மோகன்  சிங் காங்கிரஸ் ஆட்சி திருத்தம் கொண்டு வந்தது. அப்போது கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட ஐ.மு.கூ.வில் அங்கம் வகித்த கட்சிகள் சர்வ அங்கங்களையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருந்தது ஏன்?

இன்று எதிர்க்கிறார் கம்யூனிஸ்ட் சீத்தாராம் யெச்சூரி. இதற்கு முந்திய தலைவர் பிரகாஷ் காரத் 2013ல் திருத்தம் கொண்டு வரவேண்டுமென கூப்பாடு போட்டாரே அது ஏன்? இதுதான் சந்தர்ப்பவாத இரட்டை வேட அரசியல். அது போகட்டும். ஒவ்வொரு முறை திருத்தம் கொண்டு வரும் போதும் காங்கிரஸ், பாஜக அதற்கு சொன்ன காரணம், ”இந்திய வம்சா வளியினர் மீதான அக்கறை,  அவர்கள் பாதுகாப்பு”என்பது தான். முதலில் ஒரு சிறிய சரித்திரத்திற்குள் போய் விடுவோம். இந்த ”பிளாஷ் பேக்” இந்த திருத்தத்தின் மீதான   குற்றச்சாட்டுகளுக்கான பதிலுக்கு மிக அவசியமானது.பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அப்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்படி அதிகாரி சி.எஸ்.முல்லன் 1935ம் ஆண்டு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கிறார்.

இதை 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஆவணத்தில்  மேற்கோள் காட்டியிருக்கிறது. அது என்ன அறிக்கை? (காண்க பெட்டிச் செய்தி) இது 80 ஆண்டுகளுக்குப் பின் இப்போது சுடும் நிஜமாகி உறுத்துகிறது. மேலும் ஒரு உதா ரணம். வடகிழக்கு மாநிலங்களில் மேகாலாயா, மணிப்பூர், நாகாலாந்து இவற்றின் ஜனத்தொகை லட்சங்களில் தான். ஆனால் பங்களாதேஷை ஒட்டியுள்ள அஸ்ஸாமின் ஜனத்தொகை 4 கோடியே 26 லட்சம். இதில் முஸ்லிம்கள் 35 சதவீதம். இதிலென்ன தவறு என சில ”நடுநிலைவாதிகள்” கேட்கலாம். நாட்டின் வருடாந்தர சராசரி ஜனத்தொகை உயர்வையும் விட அதிகமாக, குறிப்பாக இரண்டு, மூன்று மடங்கு முஸ்லிம் ஜனத்தொகை உயர்வு அஸ்ஸாமில் நடக்கிறது என்பதே பங்களாதேஷிலிருந்து ஊடுருவலுக்கு சான்று.  இப்படி ஊடுருவியர்கள் அரசு வேலைகள், பள்ளிகள், கல்லூரிகள்,  ஏன்
எம்.எல்.ஏ.,
எம்.பி.களாக கூட ஆகிய வரலாறு அஸ்ஸாமில் நடைபெற்றது. இதனால் அஸ்ஸாமியர்களுடைய  சலுகைகள், பதவிகள், வேலை வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டன. பங்கு போடப்பட்டன. இதனால் தான் 1979 — 85ல் அஸ்ஸாமில் மாபெரும் கிளர்ச்சி நடைபெற்றது. இறுதியில் ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’ ராஜீவ் காந்தியால் நள்ளிரவில் கையெழுத்திடப்பட்டு அது இன்றும் செயல்படுத்தப் படாமல்  கிடக்கிறது.

இப்படி ஊடுருவிய ஒரு கோடி முஸ்லிம்கள் தான் அஸ்ஸாமில் தங்கள் குடியுரிமை பறிக்கப்படுமோ என்கிற அச்சத்தில் இன்று ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகிறார்கள். ஒரிஜினல் உள்ளூர்காரர்கள் சட்டத்தை முழுவதும் வரவேற்கிறார்கள் (பெட்டிச் செய்தி காண்க).

அது சரி, இது முஸ்லிம் களுக்கு எதிரானதா என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே      என்பதும் என் காதில் கேட்கிறது. இந்த திருத்தத்தில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து விரட்டப்படும் எல்லா மதத்தினரையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்,  ஏன் முஸ்லிம்களை மட்டும் குறிப்பிடவில்லை என்று கேட்பதும் புரிகிறது.

மேற்கூறிய 3 நாடுகளும் முஸ்லிம் நாடுகள். முஸ்லிம் மெஜாரிட்டி நாடுகள். அங்கு வசிக்கும் மைனாரிட்டிகளுக்கு பாதுகாப்பில்லை.  கோயில்கள் இடிக்கப்படுகின்றன. ஹிந்துப் பெண்கள் கடத்தப்படுகிறார்கள். அச்சுறுத்தலுக்கு பயந்து மதமாற்றம் அல்லது நாட்டிலிருந்து ஓட்டம் என்பதே அங்கு தினசரி நிகழ்வு. இதற்கு ஆதாரம் அங்கு இருக்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட மைனாரிட்டிகளின் ஜனத்தொகை வீழ்ச்சி.

அப்படியானால் நாம் அங்கிருந்து வரும் முஸ்லிம்களை ஏற்க மாட்டோமா? இக்கேள்வியே நகைப்புக்குரியது! விரட்டி விடுபவர்களே அவர்கள்தானே? அவர்கள் ஏன் இங்கு வருவார்கள்?

குதிரை குப்புற தள்ளி யதுடன்  – குழியும் பறித்ததாம் என்பதுபோல, வெட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல, அஸ்ஸாமிலும் நாட்டின் பல பகுதிகளிலும், ஊடுருவல் செய்து, நமது வாழ்வாதாரங்களை  பங்கு போட்டு விட்டு, நமக்கெதிராக போராட்டம் நடத்துவார்களாம்! அவர்களை இந்த மண்ணின் உப்பை தின்று வளர்ந்தவர்கள் ஆதரிப்பார்களாம்! அதை பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருப்போமாம்! இது எந்த ஊர் நியாயம்-?

நம்முடைய சொந்த ஹிந்து சகோதரன் வெளிநாடுகளிலேயே அல்லலுற்று அடித்து விரட்டப்படும்போது அவனுக்கு இல்லாத பூமியாக  இந்தியா இருக்க வேண்டுமாம். அவனது      வருகையை கேள்வி கேட்பார்களாம்! அதை பார்த்தும் பொறுமை காக்க வேண்டுமாம்? இந்த ஓட்டுப் பொறுக்கிகளின் அட்டூழியத்திற்கு ஆப்பு வைக்கும் காலம் ஆரம்பமாகி ஆறாண்டு ஆகிவிட்டது. முதலில் முத்தலாக், அடுத்து 370, இன்று குடியுரிமை சட்டம் இப்படித்தான் இந்தியா மனிதனை, மனங்களை மதிக்கும் மகோன்னத நாடாக விளங்கி வருகிறது. முத்தாய்ப்பு:

இரு அவைகளிலும் நிறைவேறிய மசோதா  ஜனாதிபதிகையொப்ப மிடவே சட்டம் ஆகியது.