முஸ்லீம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரில், மத விரோதத்தை ஏற்படுத்த முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்ததாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பைச் சேர்ந்த மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மாற்று சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்த இளைஞர்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்ததாக ஷேக் சாதுல்லா, முகமது இம்ரான் மற்றும் முகமது அப்துல் மொபின் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இ.பி.கோ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா) ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய நிஜாமாபாத் காவல்துறை ஆணையர் கே.ஆர். நாகராஜு, ‘இந்த வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பி.எப்.ஐ  தடை செய்யப்பட்ட அமைப்பாக இல்லாவிட்டாலும், அதன் உறுப்பினர்களின் இத்தகைய செயல்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம்’ என கூறியுள்ளார். முன்னதாக, தற்காப்புக் கலையில் பயிற்சி அளித்ததாக 52 வயதான அப்துல் காதர் கைது செய்யப்பட்டிருந்தார். பயிற்சி அளிப்பதற்காக சாதுல்லா அவருக்கு ரூ. 6 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நகரத்தில் வசிக்கும் பி.எப்.ஐ உறுப்பினர்களிடம் இருந்து கராத்தேவுக்கு பயன்படும் நுஞ்சாக்ஸ், கத்திகள் மற்றும் மத விரோதத்தைத் தூண்டும் உள்ளடக்கம் கொண்ட புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த அமைப்பு தெலுங்கானாவில் உள்ள ஜக்தியால், வாரங்கல் போன்ற பிற மாவட்டங்களிலும் அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள கடப்பா, கர்னூல் மாவட்டங்களிலும் தனது வலையமைப்பை பரப்பியதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில், நிஜாமாபாத்தின் பா.ஜ.க எம்.பி’யான டி. அரவிந்த், ‘இளைஞர்களுக்கு பயிற்சி அளித்ததன் பின்னணியில் சில காவல்துறை அதிகாரிகள் இருப்பதாகவும் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து தெரிந்திருந்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். நிஜாமாபாத் காவல்துறை ஆணையரை அந்தப் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். மத்திய புலனாய்வு அமைப்புகளின் அழுத்தத்தைத் தொடர்ந்தே, பி.எப்.ஐ உறுப்பினர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது’ என்று கூறினார்.

https://hindupost.in/crime/pfi-members-arrested-in-telangana-for-radicalizing-and-giving-weapons-training-to-muslim-youth-police-complicity-alleged/