மசூதி, சர்ச் என்பது முஸ்லிம்களின், கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமில்லை. அவை அவர்களின் சமுதாயக் கூடங்கள். அவர்களின் மத விஷயங்கள் பற்றி கூடிப் பேசமுடியும். ஆனால் ‘கோயில்’ என்பது ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலம். அங்கு சாமி கும்பிடலாமே தவிர ஹிந்துக்களின் பிரச்சினைகள் பற்றி பேச அனுமதியில்லை. மசூதிகளும், சர்ச்சுகளும் அந்தந்த சமூகத்தினரின் கைகளில் உள்ளன. ஆனால் கோயில் மட்டும் அரசின் பிடியில் உள்ளது.
தற்போது குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் முஸ்லிம்கள் போராடி வருகிறார்கள். மசூதிகளில் முஸ்லிம்களிடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் பேசி தூண்டிவருகின்றனர். தொழுகை முடித்து நேராக ரோட்டில் அமர்ந்து போராடுகிறார்கள். சமீப காலங்களில் முஸ்லிம் பெண்களை அதிக அளவில் திரட்டி போராட்டத்தில் ஈடுபட வைக்கின்றனர். தேர்தல்களில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைக் கூட மசூதிகளில் முடிவெடுத்து செயல்படுகின்றனர்.
அதேபோன்று கிறிஸ்தவர்களும் ஞாயிற்றுக்கிழமை அன்று சர்ச்சுகளில் மதவெறியூட்டும் சொற்பொழிவுகளை நடத்துகிறார்கள். தேர்தலில் கிறிஸ்தவர்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பது சர்ச்சுகளில் முடிவாகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதற்காக ஜெப நிகழ்ச்சிகள் கூட நடத்தினார்கள்.
வழிபாட்டுத் தலங்களை மதவெறியூட்டும் மையங்களாக பயன்படுத்தி வருவது மிகுந்த ஆபத்தானது. சிறுபான்மையினரை ஓட்டு வங்கிக்காக தாஜா செய்யும் போக்கும் கண்டிக்கத்தக்கது. தங்கள் அரசியல் சுய லாபங்களுக்காக முஸ்லீம் அமைப்புகள் அப்பாவி முஸ்லிம்களை தவறாக வழி நடத்துகின்றன. முஸ்லிம்களுக்கு உண்மையான பாதுகாப்பு என்பது பெரும்பான்மையினரின் அன்பும், நம்பிக்கை மட்டுமே. இதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும். பயங்கரவாதிகளை முஸ்லிம்கள் அடையாளம் காட்ட வேண்டுவது அவர்களின் தேசியக் கடமை.