உணவு என்பது பிரசாதம்

ஹெச். வி. சேஷாத்ரி கர்நாடக மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக (பிரச்சாரக்) பணியாற்றி வந்தார். அவர் ஒருநாள் கொள்ளேகால் பகுதியில் நடைபெறும் ஷாகாவிற்கு (ஆர்.எஸ்.எஸ்ஸி-ன் தினசரி பயிற்சி வகுப்பு) சென்றிருந்தார். அது பட்டியல் சமூக மக்கள் வாழும் பகுதி. ஷாகா முடிந்த பிறகு அந்தப் பகுதி வாசியான ஒருவரின் வீட்டுக்கு உணவருந்தச் சென்றார்.

இரவு எட்டு மணியிருக்கும். அந்த கிராமத்திற்கு மின்சார இணைப்பு இல்லாத காலம். அந்த வீட்டில் சேஷாத்திரி இயல்பாக பேசிக்கொண்டே சாப்பிட்டார். சாப்பிட்ட பிறகு தான் தெரிந்தது அந்தக் கிராமத்தில் விளக்கெண்ணையில் தான்  உணவு சமைப்பார்கள் என்பது.

திரும்பிப்போகும் வழியில் உடன் வந்தவர் சேஷாத்திரியிடம், ”சாப்பாடு கஷ்டமாக இருந்திருந்தால் நீங்கள் தவிர்த்திருக்கலாமே! அல்லது மிகவும் குறைவாக சாப்பிட்டிருக்கலாம். மாறாக நீங்கள் அவர்கள் பரிமாறிய உணவு முழுவதையும் சாப்பிட்டு விட்டீர்களே-?” என்றார்.

அதற்கு சேஷாத்ரி, ”பிரச்சாரகருக்கு சாப்பாடு என்பது கடவுளின் பிரசாதம். பிரசாதம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. உணவு எப்படியிருந்தது என்பது   முக்கியமல்ல.  பரிமாறியவர்களின் அன்புதான் முக்கியமானது. சங்கவேலை இப்படித்தான் இருக்கும்… என்ன,  நீ தயாரா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.