பாரத விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் எம்.ஐ.ஜி. போர் விமானத்தில் பறந்து பாரத எல்லைக்குள் வந்த பாகிஸ்தானிய விமானம் ஒன்றை அடித்துக் காலி பண்ணினார். அப்புறம் தான் தெரிந்தது அது அமெரிக்க தயாரிப்பான எஃப் 16 விமானம் என்று. பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு அமெரிக்காவும் எஃப் 16 விமானத்தின் மானத்தைக் காப்பாற்ற தலைகீழாக நின்று தண்ணி குடித்தது.
அந்த கதைக்கு இத்தோடு கத்தரி போட்டுவிட்டு முடி திருத்தகத்துக்குள் (அதுதாங்க சலூன்) நுழைவோம். உச்சந்தலையில் மட்டும் கொஞ்சம் முடியை விட்டுவிட்டு தலையைச் சுற்றி ‘பாக்ஸ் கட்டிங்’ செய்கிற கூட்டம் குறைந்து அபிநந்தன் மீசைக்கு ஆசைப்படுகிற கூட்டம் அதிகரிப்பது தென்படுகிறது. சிங்கத்தை அதன் குகைக்குள் நுழைந்து அதன் பிடரியை பிடித்து உலுக்கிய அந்த ஆண்பிள்ளை சிங்கம் அபிநந்தன் இளைஞர்கள் மனதில் தனது டிரேட்மார்க் மீசையுடன் குடிகொண்டுவிட்டார். எனவேதான் சலூனில் அப்படியொரு கூட்டம்.
தமிழரான அபிநந்தன் தனது மீசையால் மக்களின் கவனத்தை கட்டிப்போட்டார் என்றால் அது சகஜம். தமிழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக சிவாஜி நடித்த காலத்தில் இருந்து மீசைக்கு ஆசைப்படும் போக்கு உண்டு. (‘‘மீசையை முறுக்குகிறாயா அது ஆபத்துக்கு அடையாளம்” என்ற வெள்ளைக்கார பானர்மேனின் டயலாக் ஞாபகம் இருக்கிறதா?)ரஜினி, நெப்போலியன், சூர்யா என்று மீசை வைத்து ரசிகர்களுக்கு ஆசை காட்டிய கதை தொடர்கதை.
மீசைக்கு அடைமொழிகள் கூட உண்டு. ‘கடா மீசை’ ஒரு உதாரணம். ஆட்டுக்கடாவின் கொம்புகளை ஞாபகப்படுத்தும் மீசை என்பதாலோ என்னமோ? ஆனால் இப்போதைக்கு அபினந்தன் மீசை என்பது ஒன்றுதான் தூள்பரத்துகிறது.
அமுல் நிறுவனம் தன் விளம்பரத்தில் ஒரு தமாஷ் பண்ணியது. ஒரு சிறுமி அமுல் பால் குடிக்கிற மாதிரி காட்டிவிட்டு சிறுமியின் முகத்தில் தெரியும் ‘பால்மீசை’ க்கும் அபிநந்தன் என்று பெயர் கொடுத்தது!
அபிநந்தன் மீசை இவ்வளவு பளிச்சென்று கவனத்தைக் கவர்வதால் ஒருசிலர் சேர்ந்து அபிநந்தன் மீசை உள்ள ஒருவர் அபிநந்தனைப் போல எரியும் விமானத்திலிருந்து பாகிஸ்தான் மண்ணில் குதித்து தப்பிப்பது போல திரைப்படமே எடுத்துவிட்டார்கள். இனிமேல் இதுபோலெல்லாம் அபிநந்தனை இமிடேட் செய்யாதீர்கள் என்று அரசே எச்சரிக்கை செய்ய வேண்டியதாயிற்று.
பெங்களூருவில் ஒரு கில்லாடி சலூன்காரர் ‘இங்கே அபிநந்தன் மீசை வைத்துத் தரப்படும்’ என்று விளம்பரமே செய்துவிட்டார். முன்பெல்லாம் சீவலப்பேரி பாண்டி ஸ்டைல் மீசை கேட்ட வாடிக்கையாளர்கள் இப்போது கேட்பதெல்லாம், உங்களுக்கே தெரியுமே, அபிநந்தன் மீசைதான்.
மீசையின் வசீகரம் மட்டுமல்ல, தேசபக்தியும் சேர்ந்துகொள்ளவே, அபிநந்தன் மீசை அநேகமாக மீசைகளின் பாப்புலாரிட்டியில் முதலிடம் பிடித்திருக்கிறது. பகைவனின் விமானத்தை வீழ்த்திவிட்டு பகைவனிடம் பிடிபட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் வீரத்திற்கு மட்டுமல்ல தேசபக்திக்கும் பிரம்மாண்டமான அடையாளமாகிவிட்டார்.
சில ஊர்களில் குழந்தைக்கு அபிநந்தன் என்று பெயரிட்டார்கள். ஆனால் அபிநந்தன் போல மீசை வைத்துக்கொள்வது பல ஊர்களில் இளைஞர்கள் துடிக்கும் தேசபக்தியை காட்ட அபிநந்தன் மீசை வைக்க துடிக்கிறார்கள். ஒருநாளில் முளைக்கக்கூடியதா இந்த மீசை?