‘முப்பது கோடி முகமுடையாள்…’ – பிரதமர் மோடி

அயோத்தி தீர்ப்பு வெளியான பிறகு அமைதி காத்து, நாட்டின் நலனே தங்களுக்கு முக்கியம் என முதிர்ச்சியை வெளிப்படுத்திய மக்களுக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்ற, மகாகவி பாரதியின் பாடலை மேற்கொள்காட்டி, பிரதமர் பேசினார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.’அந்த இடத்தில் ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு, அயோத்தியின் முக்கிய இடத்தில், ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்’ என, தீர்ப்பில் கூறப்பட்டது.தீர்ப்பு வெளியான பின், ‘டிவி’ மூலம், நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் வானொலியில் ஒலிபரப்பாகும்,’மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மோடி  : அயோத்தி தொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தீர்ப்பு அளித்தது. அப்போதும் நம் மக்கள் அமைதி காத்து, பொறுமையுடன் இருந்தனர். தற்போது, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இப்போதும், மக்கள் அமைதி காத்து, கட்டுப்பாடுடன், முதிர்ச்சியுடன் செயல்பட்டனர். மற்ற எதையும் விட, நாட்டின் நலனே தங்களுக்கு முக்கியம் என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்.

நாட்டின், 130 கோடி மக்களுக்கும் பாராட்டு தெரிவிப்பதுடன், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்குப் பின், புதிய பாதை, புதிய உறுதியுடன் இந்தியா அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்து உள்ளது. புதிய நம்பிக்கை, எதிர்பார்ப்பு அடங்கியது தான் மக்களின் இந்த உறுதி. அமைதி, ஒற்றுமை, சமத்துவம் ஆகியவற்றுடன், புதிய இந்தியா இருக்கும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.

ஒரு புறம் நீண்டகாலமாக இருந்து வந்த சட்டப் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் மிகச் சிறந்த தீர்ப்பை அளித்ததன் மூலம், நீதித் துறையின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்து உள்ளது. இந்தத் தீர்ப்பு, இந்திய நீதித் துறை வரலாற்றின் ஒரு மைல்கல் என்று கூறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.’முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புற வொன்றுடையாள்’ என்ற பாரதியாரின் பாடலை மோடி மேற்கோள் காட்டி, மோடி பேசினார்.

அரசியல் ஆசை இல்லை

மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது, என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படை மாணவர்கள், தொலைபேசியில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, பிரதமர் மோடி, ரேடியோவில் உரையாற்றினார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்ததில்லை.

ஆனால், தற்போது தீவிர அரசியலில் உள்ளேன். அதனால், என் முழு உழைப்பையும், நாட்டு மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றுவதில் செலவிடுகிறேன்.சிறு வயதில் நானும், என்.சி.சி.,யில் இருந்தேன். தேசப்பற்றை வளர்ப்பதில் அந்த அமைப்புக்கு சிறந்த பங்கு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

‘பிட் இந்தியா’

‘பிட் இந்தியா’ எனப்படும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் திட்டத்தில், அனைத்து பள்ளிகளும் இணைய வேண்டும். மாணவர்களிடம் இது குறித்த ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும்.இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகள் தரவரிசை படுத்தப்படும்.நாட்டின் பாதுகாப்புக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில், கொடி நாள் நிதிக்கு, மக்கள் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.