மாநிலம் பிறந்ததாம், மார்தட்டுகிறார்கள்!

பஸ்ஸில் பயணம் செய்த 12ம் வகுப்பு மாணவனிடம் ‘நமது நாட்டின் பெயர் என்ன?’ என்று ஒரு பெரியவர் கேட்டார். ‘தமிழ்நாடு’ என்று பதில் வந்ததே பார்க்கலாம். அப்புறம் நடந்ததெல்லாம் பெரிய விஷயமல்ல. ‘‘அப்பனே, தேசம் பாரத தேசம். ராஜஸ்தான், ஒரிஸா, கேரளா போல தமிழ்நாடு என்பதும் ஒரு மாநிலம். தேசத்தை நிர்வாக வசதிக்காக மாநிலங்களாக பிரித்துக்கொண்டோம். அது நடந்தது 1956ல். மொழிவாரி மாநிலப் பிரிவினை என்று அதை சிலர் குறிப்பிட்டாலும் ஒருமொழி பேசும் பலமாநிலங்களும் பல மொழிகள் பேசும் மக்கள் கொண்ட சில மாநிலங்களும் இந்த ஏற்பாட்டில் இருந்தை சௌகரியமாக மறந்துவிடுகிறார்கள்’’ என்று பெரியவர் சொல்லி முடிப்பதற்குள் மாணவன் தூங்கிப் போய்விட்டான். காரணம், இதெல்லாம் பள்ளிப்பாடத்தில் இடம்பெறாத விஷயங்கள், அவுட் ஆஃப் போர்ஷன்! நிற்க.

ஒருபோதும் கொண்டாடாத ‘தமிழ்நாடு நாள்’ (நவம்பர் 1) இப்போது கொண்டாடுவது ஏன்? அறிவிக்கப்பட்ட உத்தேசம் எதுவாக இருந்தாலும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் முன்வைத்த வாதம் விபரீதமாக தொனித்தது. அவர் சொன்னார் : ‘‘தமிழ்நாடு என்ற பெயருக்கு மத்திய அரசு ஆட்சேபம் எழுப்பியது. மாநில என்றுதானே இருக்கவேண்டும், நாடு என்று இருக்கிறதே என்றார்கள். அந்த நாளில், ‘தமிழை நாடு அதாவது தமிழ்நாடு என்பதில் உள்ள நாடு பெயர்சொல் அல்ல, வினைச்சொல் என்று சொல்லி சமாளித்து தமிழ்நாடு என்ற பெயரையே சூட்டினார்கள்’’. அமைச்சர் குட்டை உடைத்தாலும் உடைத்தார், பழைய குள்ளநரித் தந்திரம் அம்பலமாயிற்று.

அடுத்த தலைமுறையினரின் மனதில் ஒரே தேசம் பல மாநிலங்கள் என்ற ஆரோக்கியமான கருத்தை பதியச்செய்வதற்கு பாண்டியராஜன் முயற்சி செய்திருந்தாரென்றால் பாராட்டலாம். அவரோ திருட்டு மாங்காயின் ருசியை வர்ணிக்கும் விடலை போல பெயர்ச்சொல், வினைச்சொல் வியூகங்களில் விளையாடினார். அந்தநாளில் அப்படி. இந்த நாளிலும் வரும் நாட்களிலும் எப்படியோ?

தேசத்திலேயே கொடூரமான ஐ.எஸ். ஆசாமிகள் கணக்கு வழக்கில்லாமல் காலூன்ற முயற்சி செய்வது தமிழ்நாடு மாநிலத்தில் தான். சுத்தமாக களை யெடுத்தால்தான் அறுவடை தேறும். அதற்கு என்ன செய்யலாம், என்னென்ன செய்யலாம் என்று நட்பார்ந்த பாரத அரசுடன் கலந்தாலோசித்து செயல்படுவதை விட்டு அழுகிப்போன மலரும் நினைவுகளை ஊருக்குள்ளே பரப்புவதில் என்ன புண்ணியம்?

தமிழகத்தில் வடக்கு எல்லை தெற்கு எல்லை போராட்டங்களை நினைவுபடுத்தி தமிழனின் சுருங்கிப் போகும் சிந்தனையை ஊர் நடுவில் விஸ்தாரமாக சித்தரிக்கிறார்களே இவர்களெல்லாம் இன்றைய தேதியில் தேசத்தின் இமய எல்லையையும் ஹிந்து மகாசமுத்திர எல்லையையும் பாதுகாப்பதற்காக (அதாவது நாமெல்லாம் கவலையின்றி வாழ்வதற்காக) உயிரைக்கொடுக்க சித்தமாக இரவும் பகலும் நிற்கிற நமது பாரத ராணுவ வீரர்கள் பற்றி கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தார்களா? பார்க்கணும்.