மாணவம்:மாணவர்கள் அடிமாடுகளாகி பள்ளிக்கூடம் கொட்டடியாகிவிட்ட சூழலில் வீசிய தென்றல் ‘மனதின் குரல்’!

தினத்தந்தி, ஜெயித்துக்காட்டுவோம்! போட்டிக்கு தினமலர், தினகரன், தினமணியின் வெல்லப்போவது யாரு? எங்கள் பத்திரிகை இந்த ‘கல்விமேளாவை’  நடத்தவில்லை என்றால் வியாபாரப் போட்டியில் நான் பின்தங்கி விடுவேன் என்கிற அச்சம்! அதனால் கவுன்சலிங் என்கிற பெயரில் உயர்த்துகின்ற ‘டென்சன்’ தான் உச்சம்!

மார்க் மேனியாவுடன் நடக்கும் கல்விக் கொட்டடிகளில் 18 மணி நேரம் படிக்கவேண்டும்! படித்ததை ஒப்புவித்து வாந்தி எடுக்கவேண்டும். அறிவை வளர்ப்பதைவிட மார்க் எடுக்க குறுக்கு வழிகளே கற்பிக்கப்படும்! தாக்குபிடிக்காத மாணவர் மாணவியர் பாதியில் ஓடுவதும் தூக்கில் தொங்குவதும் ஆண்டு தோறும் நடக்கும் அவலங்கள்!

இவற்றிலிருந்து வித்தியாசமாக, கவுன்சிலிங் தரும் ஒப்பற்ற ஐடியாவை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மனதின் குரலில்’ தந்துள்ளார்! பிரதமர் என்ற பொறுப்பில் இருந்து பேசியதால் அவர் பேச்சை நான் சிலாகித்து கூறவில்லை! ஒரு மனோதத்துவ பயிற்சியாளன் என்னும் முறையில் கல்வியில் பின்தங்கிய பல மாணவர்களுக்கு நேரடியாகவும் சில பள்ளிகளின் மூலமாகவும் கவுன்சிலிங்” செய்தவன் என்ற முறையில் மோடியின் பேச்சு, ஒரு மனோதத்துவ நிபுணர் பேச்சுக்கு இணையாக இருந்தது.

தனிப்பட்ட வாழ்க்கையில், பிள்ளை குட்டி கிடையாது. குடும்பம் கிடையாது… என்பதோடு, முழுநேர ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகராக இருந்தவர். பின்னர் அரசியலில் ஆட்சிபீடத்தில் இருந்தவர். குடும்பம், பெண், தாய், குழந்தைகள், குறிப்பாக பள்ளி/கல்லூரி மாணவர்கள், அவர்கள் பிரச்சினை, அதன் உள் இருக்கும் மன அழுத்தம் இவற்றை மோடி அறிந்திருக்க வாய்ப்பில்லை தான் நானும் நினைத்தேன்!

கலாச்சாரமும் பண்பாடும் காக்க வேண்டுமென மோடியின் உரையில் வந்த கருத்து அவரது ஆர்.எஸ்.எஸ் பின்னணியின் வெளிப்பாடு.

சாதாரணமாக மோடி சொல்ல வரும் கருத்துக்களை அதற்கான கேள்வி கேட்டவர்களுக்கு பதிலாகவே உரைப்பது ‘மன் கி பாத்’ தின் வழக்கம்! அந்த வகையில் மாணவ மாணவியருக்குச்  தேர்வை ஜாலியாக சந்திக்கும் உத்தியைச் சொல்கிறார் பாரதப் பிரதமர்!

ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஏப்ரல் மாதங்கள் வருடத்தில் பரிட்சை, அதற்கான தயாரிப்புக்கான மாதங்கள். பெரும்பாலும் இம்மாதங்களில் மாணவ மாணவரின் டியூஷன், பெற்றோரின் அழுத்தம், பள்ளிகளின் அழுத்தம் என மாணவர்களின் காலம் நரகமாகவே இருக்கும்!

தன் வீடு மட்டுமல்ல, சுற்றுப்புறமே 4 மாதங்கள் அழுத்த நரகமாக மாறிவிடுகிறது எனச் சொல்லும் சிருஷ்டி என்ற மாணவிக்கு நரேந்திர மோடி பதில் சொல்கிறார்:

படிக்கும் போது மன அழுத்தத்திற்கு உள்ளானீர்கள் என்றால் அது உங்கள் ஞாபக சக்தியை பாதிக்கும்! உங்களுக்கு தேவையான நேரத்தில் படித்தவை வெளியே வராது! மாறாக, ரிலாக்ஸ்டாக இருக்க பழகினால், மனமும் உடலும் மிருதுவாக இருக்கும். படித்தவை மறக்காது!

தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்காமல், அவ்வப்போது எழுந்து சென்று வாருங்கள். வீட்டை சுற்றியுள்ள இயற்கையை ரசியுங்கள்.. ஏதாவது பிஸ்கட், பால் போன்ற உணவை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம், மனம்விட்டு சிரிக்கும்படி கார்ட்டுன்கள் பாருங்கள் ஏதாவது புத்தகம் புரட்டுங்கள், டிவி நிகழ்ச்சியை பாருங்கள்! சிறிது நேரம்  யோகா, தியானம் செய்யுங்கள்! இவை மனதை அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் மந்திரக் கோலாகும்” என்கிறார் மோடி.

போட்டி வேண்டியதுதான். அது உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொள்கிற போட்டியாக இருக்கவேண்டும். சச்சின் டெண்டுல்கர், தனக்குத்தானே போட்டியாளர் ஆனார். தன்னுடைய தானே முறியடித்தார். இது ஆக்கப்பூர்வமான, அழுத்தமில்லா போட்டியாகும்!

நம்மை சுற்றியுள்ள சூழலை நாம், ஆரோக்கியமானதாக நமக்கு சாதகமானதாக வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று உடல்நிலை சரியில்லாதவரிடம் ஆயிரம் கேள்விகேட்டு, அவரது மன நிலையை பாதிப்படைய செய்யக்கூடாது. மாறாக ஒரே சிரிப்பும் சந்தோஷமுமான சூழலை உருவாக்கினால் நோயாளி சீக்கிரம் குணமடைவார் என மனோதத்துவ நிபுணரை விஞ்சும் ஆக்கப்பூர்வ உரையை நிகழ்த்தி இருக்கிறார் மோடி!

எனக்கு தெரிந்த ஒரு டி.வி. நெறியாளர், பேட்டிக்கு சில நிமிடம் முன்புவரை ரிலாக்ஸ்டாக இருப்பார். முன்னமே ஒருமுறை மனதளவில் ரிகர்சல் பார்த்துவிடுவார்! கடைசிநேர டென்சன் நிகழ்ச்சியின் வெற்றியை சீர்குலைக்கும் என்றார்!

என் நண்பரின் மகன் மீள்பார்வை முழுவதும் வீட்டிலேயே முடித்துவிடுவார்? பரிட்சைக்கு ஹால் டிக்கட், பேனா, பென்சில், ஸ்கேல் மட்டுமே எடுத்து செல்வார்? காரணம் கேட்டால் மனது அமைதியாக இருந்தாலே, எழுதும்போது அது பேப்பரில் கொட்டும் என்பார்!

மாணவ/மாணவியரே. பல்வேறு அழுத்தங்கள் சூழ்ந்துள்ளதை உணருங்கள்! அதில் விழமாட்டேன் என மனதுக்கு சொல்லிக் கொள்ளுங்கள்!

உடல் ஆரோக்கியம் முக்கியம்! நல்ல உணவே அதற்கு மருந்து. என்மகள் ஐஸ்வர்யா, தேர்வு எழுதிய பிறகு எந்த கேள்விகள் – என்ன பதில் – எவ்வளவு பதில் தெரியாமல் விட்டேன் – எவ்வளவு மதிப்பெண் என நண்பர்களோடு சேர்ந்து விவாதிக்க மாட்டாள்! நேராக வீடு வந்துவிடுவாள்!

எழுதியதற்கு மார்க் வரப்போகிறது! அதை விவாதித்து மன உளைச்சலை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தநாள் பரிட்சையை நாமாகவே வீணடிப்பதா என்பாள்.

இங்கே தான் பகவத் கீதை

நமக்கு வழிகாட்டுகிறது. கடமையைச் செய் பலனை எதிர்பார்த்து நேரத்தை விரயம் செய்யாதே! அதுவாக வந்துசேரும்!

படியுங்கள்! சந்தோஷமாக இருங்கள்! பரிட்சையை நன்றாக எழுதுங்கள்! மதிப்பெண் அடைமழையாகக் கொட்டும்!