மன்னாத்து பத்மநாபன் பிள்ளை

பாரத கேசரி மன்னாட்டு பத்மநாபன் கேரளாவைச் சேர்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரர். இவர், கோட்டயம், பெருண்ணா கிராமத்தில் பிறந்தார். அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், பின்னர் வழக்கறிஞராக தொழில் புரிந்தார். நாயர் சமூகத்தின் நிலையை உயர்த்துவதே அவரது லட்சியமாக இருந்தது. இதற்காக, அவர் வழக்கறிஞரர் தொழிலையும் துறந்தார். நாயர் சர்வீஸ் சொசைட்டியின் செயலாளராகவும் தலைவராகவும் இருந்து வழி நடத்தினார். பத்மபூஷன் விருதும் பெற்றார். அவருக்கு பாரத ஜனாதிபதி, ‘பாரத கேசரி’ என்ற பட்டத்தை வழங்கினார்.
பத்மநாபன், சமூக சமத்துவத்திற்காக போராடினார். வைக்கம், கோயிலுக்கு அருகிலுள்ள பொது சாலைகளில் பட்டியல் இன ஹிந்துக்கள் நடமாட திறக்கப்பட வேண்டும் என்று போராடினார். பின்னர், அவர் 1924ல் வைக்கம், 1931ல் குருவாயூர் கோயில் நுழைவு சத்தியாக்கிரக போராட்டங்களிலும் பங்கேற்றார். சுதந்திர போராட்டத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறார். சுதந்திரத்துக்கு பிறகு, 1949ல் திருவிதாங்கூர் சட்டமன்றத்தில் உறுப்பினரானார் பத்மநாபன். திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, பாழடைந்த,  பல கோயில்களை புணர்நிர்மானம் செய்தார். நாயர் சமூக சீர்திருத்தவாதி, தார்மீக வழிகாட்டியாக கருதப்படும் இவர் தனது 92 வயதில் உயிர் நீத்தார்.
மன்னாத்து பத்மநாபன் பிள்ளை பிறந்த தினம் இன்று.