மனதில் நீங்கா இடம் பிடித்த எம்எஸ்.சுப்புலட்சுமி; ஒரு பார்வை

இசை என்பது ஒரு ஆசீர்வாதம், கடவுளின் வரம் மிக சிலருக்கே அந்த பிராப்தம் வாய்க்கின்றது. அதனை முறைபடி பயன்படுத்தியவர்கள் மிக பெரும் உயரத்தை அடைகின்றார்கள். தாம் பிறந்த நாட்டிற்கே பெருமை சேர்க்கின்றார்கள், அவர்களின் ஒருவர்தான் “இசை பேரரசி” என அழைக்கபட்ட எம்.எஸ் சுப்புலட்சுமி.

மதுரை சன்முகவடிவு சுப்புலட்சுமி உலகிலே தாயின் பெயரை இன்சியலாக கொண்ட மிக சிலரில் அவரும் ஒருவர், காரணம் துயரமானது. தாய் பாடகி எனினும் தந்தை சுப்பிரமணிய அய்யர் என்பதை பின்னாளில்தான் அறிந்தார், அதனால் தாயின் பெயரிலே அழைக்கபட்டார். (ஆம், அவர் தேவதாசியின் வம்சம், உண்மையில் தமிழக கலைகளை அந்த இனமே காத்து வந்தது, தேவதாசிகள் என்பவர்கள் வேறு, பரத்தையர் கணிகையர் என்பது வேறு

தேவதாசிகள் என்பவர்கள் கோவிலில் கலை காத்து நின்ற வம்சம், தமிழும் இசையும் , கலையும், பாடலும் அவர்களிடமே இருந்தது, கலைகளை அவர்கள்தான் காத்தார்கள்.

அரசன் இருந்த வரை பெரு வாழ்வு வாழ்ந்த அவர்கள் மன்னர் முறை முடிந்த பின் செல்வாக்கிழந்தது, அந்த கங்கைகளில் சில பிரிந்து சாக்கடைகளில் கலந்தது பின்னாளில் அடையாளமே மாறிற்று.)

அவர் தாயும் நல்ல‌ பாடகர் அதனை விட வீணை வித்வான், அவரின் வீணை இசையினை ஒரு நிறுவணம் பதிவு செய்ய வந்த பொழுது “என் மகள் பாடுவாள் தெரியுமா?” என சொல்லி, மகளை அழைத்து பாட செய்தார், கம்பெனியார் அசந்தனர், அங்கு வந்திருந்த அன்றைய ஆளுநரும் அசந்துவிட்டார். வீணை இசை பதிவு செய்ய சென்றோர் சுப்புலட்சுமியின் பாடலையும் பதிவு செய்தனர்

அன்றிலிருந்தே அந்த 8 வயதில் இருந்தே பாட தொடங்கினார். அவரின் அசாத்திய திறனை உணர்ந்த அன்றைய பெரும் பாடல் ஆசான்களான பல பாகவதர்கள் அச்சிறுமியினை கூர் படுத்தினர்.

அவருக்கு 10 வயதாக இருந்த 1926ல் சுப்புலட்சுமியின் முதல் இசைதட்டு வெளி வந்தது, கொஞ்சம் கொஞ்சமாக உலகம் அவரை அறிய தொடங்கியது

அது திரையுலகம் தொடங்கிய காலம், அன்று ஒரே தகுதி பாடல் தெரிந்தவர்களே நடிக்க வேண்டும். காரணம் பிண்ணணி நுட்பங்கள் அன்று வரவில்லை, டப்பிங் எல்லாம் இல்லை (அதனால்தான் ராமசந்திரன் போன்றோர் அரைகிழடு ஆன பின்னே, தொழில் நுட்பங்கள் மாறிய பின்னே தான் நடிகனாக முடிந்தது, யழவு தொழில் நுட்பம் வராமலே போயிருக்கலாம்)

இதனால் பாடகர்கள் மட்டுமே நடிக்க முடியும் என்பதால் தியாகராஜ பாகவதர், கிட்டப்பா போன்று எம்.எஸ் சுப்புலட்சுமியும் நடிக்க வந்தார். 1936களில் நடிக்க வந்தார், அப்பொழுது சதாசிவம் என்பவருடன் காதலாகி 1941ல் திருமணமும் செய்தார்.

அப்பொழுது சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடிக்க கேட்டு கொள்ளபட்டார், ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமிக்கு எண்ணமில்லை, சினிமா விட்டு வெளியேறும் முடிவில் இருந்த பொழுது சிக்கல் வேறு வகையில் வந்தது. சதாசிவமும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் ஆனந்த விகடனின் இருந்தார்கள், பின் வெளியேறி பத்திரிகை தொடங்க எண்ணினார்கள், பெரும் பணம் தேவைபட்டது. வேறுவழியின்றி நாரதர் வேடத்தில் நடித்து பணம் கொடுத்தார் சுப்புலட்சுமி. அந்த பணத்தில் தொடங்கபட்டது தான் “கல்கி” பத்திரிகை, அந்த கிருஷ்ணமூர்த்திதான் பொன்னியின் செல்வன் எல்லாம் எழுதிய அசாத்திய எழுத்தாளன். இதனிடையே காந்திவாதியான சதாசிவம், சுப்புலட்சுமியினை காந்திக்கு அறிமுகம் செய்து வைத்தார். காந்திக்கு விருப்பமான பாடலை பாடி அவரை நெகிழ செய்தார் சுப்புலெட்சுமி.

அதுமட்டுமன்றி 4 கச்சேரிகளிலே ஏராளமான பணம் வசூலித்து காந்திக்கு நன்கொடையாக கொடுத்த பொழுது காந்தி உருகி நின்றார், கச்சேரிகளில் அவர் வசூலித்தது 4 கோடி இருக்கலாம் என்கின்றன செய்திகள், அப்படிபட்ட வரவேற்பு அவருக்கு இருந்திருக்கின்றது. பாரதியாரின் பாடல்களுக்கு அன்றே குரல்வடிவம் கொடுத்தவர் சுப்புலட்சுமி.

அதன் பின் மீரா படத்தில் அவர் பாடி நடிக்க இந்தியா எல்லாம் கொண்டாடபட்டார், 1945ல் வந்த அப்படம் வட இந்தியாவில் பெரும் வரவேற்பினை பெற்றது, அவரின் அழியா பாடலான “காற்றினிலே வரும் கீதம்” அதில் தான் வந்தது. இப்பாடலுக்கு பின் நேருவும், விஜயலட்சுமி பண்டிட்டும் சுப்புலட்சுமியினை தலைக்கு மேல் வைத்து கொண்டாடினர். இந்தியா முழுக்க பிரபலமான சுப்புலட்சுமி, எல்லா மொழிகளிலும் பாடினார், அப்படியே அயல்நாடுகளுக்கும் அழைப்பு வந்தது. நான் “இந்நாட்டின் சாதாரண பிரதமன், சுப்புலட்சுமி இசை உலகின் பேரரசி” என நேரு சொன்ன பின் உலகம் அவரை அழைத்தது.

இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் இந்தியர் பெருமிதம் கொள்ளலாம்” என சொன்னவர் விஜயலட்சுமி பண்டிட். ரஷ்யாவில் அவர் பாட சென்றபொழுது, முதலில் சில ரஷ்யர்கள் அவமானபடுத்தினர், ஆனால் பாடி முடித்த பொழுது கண்ணீர் மல்க அவர் முன் நின்று, உள்ளத்தை உருக்கும் பாடலை முதன் முறையாக கேட்டதாக சொன்னார்கள்.

1966ல் ஐநாவில் உலக அமைதிக்காக பாட சென்றார், ராஜாஜி “லார்டு மே பார்கிவ் அவர் சின்” என்ற பாடலை எழுதி கொடுத்தார், சபையில் சுப்புலட்சுமி பாடிய பொழுது அப்படி ஒரு அமைதியும் அவர் பாடி முடித்த பின் பெரும் கரகோஷமும் எழும்பின‌. இன்று சென்னை இசை நகரம் என ஐ.நா சொல்ல சுப்புலட்சுயின் அந்த பாடல் அரங்கேற்றம் மகா முக்கியமானது.

எல்லா விருதுகளும் அவரை தேடி வந்தன, சங்கீத கலாநிதி பட்டத்தை வென்ற முதல் பெண் அவர் தான், பிலிப்பைன்ஸ் நாட்டின் ராமன் மகசேச விருதும் அவரை தேடி வந்தது. அந்த அளவு அவர் மக்கள் அபிமானமும், சர்வதேச கவனமும் பெற்றறிருந்தார், கேட்காமலே விருதுகள் குவிந்தன.‌ அவர் பாடாத ராகமில்லை, மயங்கா உள்ளமில்லை, பெறாத விருதுகள் இல்லை. எத்தனை பெரும் புகழை பெற்றாலும், எத்தனை பெரும் சிறப்புக்களை பெற்றிருந்தாலும் ஒருவர் காலத்திற்கு பின் எது நிலைத்திருக்கின்றதோ அதுதான் புகழ்

திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு அவர் பாடிய “கௌசல்யா, சுப்ரஜா..” எனும் பாடல் ஒலிக்கா இந்து நண்பர்கள் வீடு ஏதும் உண்டா? அது அவர் பாடியது, அனுதினமும் அவர் குரல் எல்லா வீடுகளிலும் துயில் எழுப்புகின்றது. இதற்கு நன்றிகடனாக திருப்பதியிலே அவருக்கு சிலை வைத்தது தேவஸ்தானம்.

ராஜாஜியின் புகழ்மிக்க வரிகளான ‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற வரிகளை குரலாக்கி தேனமுதமாக அவர் தான் மாற்றினார், இன்றும் பலமுறை கேட்டாலும் ரசிக்க தக்க பாடல் அது காந்தியின் விருப்ப பாடலான வைஷ்ணவ ஜனதோ பாடலை இன்றும் நிறுத்தியிருப்பது அவர் குரல்தான். மதுரையில் பிறந்த அந்த தமிழச்சி தன் இசையால் உலகம் முழுக்க பெரும் பெயர் பெற்றார், பெரும் அடையாளமிட்டார், இத்தேசத்திற்கு பெரும் கலைச்சேவை செய்து மங்கா புகழ் அடைந்தார். இதனால் அவருக்கு “பாரத ரத்னா” எனும் மிக உயரிய விருதை இத்தேசம் கொடுத்து கவுரவித்தது.

தன் வாழ்வில் தன் தாயும், தன் கணவருமே தன்னை உருவாக்கியவர்கள் என சொல்லிகொண்டிருந்த எம்.எஸ் சுப்புலட்ச்சுமி சாதாசிவம் 1997ல் இறந்தபின் பாடவில்லை. அவர் இல்லாமல் பாடுவதில்லை எனும் வைராக்கியத்திலே இருந்த அவர் 2004ல் மறைந்தார். இன்று அவர் பிறந்த நாள், ஒரு வசீகர குரல் அவதரித்த நாள். தமிழகத்து இசையான கர்நாடக இசையினை உலகெல்லாம் கொண்டு சென்று பெரும் புகழை தனக்கும் தமிழகத்திற்கும் கொண்டுவந்தவர் அவர்.

ஆணாதிக்கம் நிறை உலகில் அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து பெரும் பிம்பமாக எழும்பிய பெண் அவர். இசைக்கு ஆண் பெண் பேதமில்லை என நிரூபித்துகாட்டியவர் அவர். தனக்கு கிடைத்த இசை வரத்தை சமூகம், நாட்டு விடுதலை போராட்டம், சினிமா, மதம் , நாடு என எல்லாவற்றிற்கும் பயன்படுத்திய பாடகி அவர். என்பது மறுக்க முடியாது. இசை அரசி சுப்புலட்சுமி மறைந்தாலும் அவர் பாடல்கள் மூலம் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டே இருப்பார், காற்றினிலே வரும் கீதம் கேட்டு கொண்டே இருக்கும்.

அந்த இசைத்தாய்க்கு ஆழ்ந்த அஞ்சலி.