மத்திய பல்கலைகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வில் பங்கேற்க, மாநில பாடத்திட்ட மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு, மருத்துவ படிப்புக்கு ‘நீட்’ தேர்வு, ஐ.ஐ.டி.,க்களில் இன்ஜினியரிங் சேர ஜே.இ.இ. தேர்வு, பி.ஆர்க். படிக்க ‘நாட்டா’ தேர்வு என, பல தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மத்திய பல்கலைகள் மற்றும் சில தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைகளில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர, சி.யு.இ.டி., என்ற ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்கின்றனர். மாநில பாடத்திட்ட மாணவர்கள், அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை.
நடப்பு கல்வி ஆண்டுக்கான க்யூட் தேர்வு, மே 15 மற்றும் மே 31ல் நடக்கிறது. இதற்கு விண்ணப்ப பதிவு செய்வதற்கான கால அவகாசம், வரும், 31ம் தேதியுடன் முடிகிறது.
இந்நிலையில், மாநில பாடத்திட்ட மாணவர்கள், க்யூட் தேர்வில் அதிகமாக பங்கேற்கும் வகையில், உரிய விழிப்புணர்வு மேற்கொண்டு, அவர்களை அதிகமாக விண்ணப்பிக்க வைக்குமாறு, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.