டெல்லி மாநில நிர்வாகத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. தேசிய தலைநகரான டெல்லியின் நிர்வாகம் என்பது அதன் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான தொடர்பு, அங்குள்ள தூதரகங்கள், மற்ற மாநிலங்களுடனான விவகாரங்கள் உள்ளிட்ட பலவற்றுடன் தொடர்புடையது. தலைநகரின் தூய்மை, மின்சாரம், குடிநீர் வினியோகம், மக்கள் சேவை, போக்குவரத்து போன்ற பல விஷயங்கள் உலக அளவிலான நமது நாட்டின் நன்மதிப்புடன் தொடர்புடையது. இந்த சூழலில், இந்த நிர்வாகங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க மாநில நிர்வாகத்திடம் இருப்பது சரியானது அல்ல. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே சேவைகள் துறை செயலாளர் ஆஷிஷ் மோரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடமாற்றம் செய்து உத்தரவிட்டது இதன் தாக்கத்தை உணர்த்த போதுமான ஒரு உதாரணம்.
இந்த சூழலில், மத்திய அரசு தற்போது ஒரு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, அரசு அதிகாரிகள் பணி நியமனம், இடமாற்றம் தொடர்பாக முடிவு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாண்மை முடிவின்படி பணி நியமனம் மற்றும் இடமாற்றம் முடிவுகள் இருக்கும். ஒருமித்த முடிவு ஏற்படாவிட்டால் துணைநிலை ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கினார். இதனால், இந்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மேல்முறையீட்டு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, டெல்லி யூனியன் பிரதேசத்தில் நிர்வாக சேவைகளில்மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.