மதிப்பீடுகள்

ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் காரின் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. ஆள் நடமாட்டமே இல்லை. பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை. தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னியை மாற்ற ஆரம்பித்தார். அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும்போது, கால் தடுக்கிக் கீழே விழுந்தார். கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய் பக்கத்தில் இருந்த சாக்கடையில் விழுந்தன. என்ன செய்வது? என்று யோசித்தார்.

அப்போது கிழிந்த ஆடையுடன் ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான். அவரிடம் “ஐயா! என்ன ஆயிற்று?” என்று கேட்டான். அந்த விஞ்ஞானி தன் மனதிற்குள் “இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள்” என்று எண்ணினார். அவனிடம், “இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து கொடுக்க முடியுமா? எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்” என்றார்.

அதற்கு வழிப்போக்கன், “இதுதான் உங்கள் பிரச்சினையா? அந்தக் சாக்கடையில் இறங்கி போல்ட்டுகளை எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது” என்றார். “அப்படியா?” என்று ஆர்வத்துடன் கேட்டார் விஞ்ஞானி. “மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார் செய்து கொள்ளுங்கள். வண்டியை ஓட்டிச் சென்று அருகில் உள்ள மெக்கானிக் கடையில் வேறு நான்கு போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் ஒவ்வொன்றாக மாட்டிக் கொள்ளுங்கள்” என்றான்.

விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும், இந்த சுலபமான வழி புலப்படாமல் போனதே. இவரைப்போய் குறைத்து மதிப்பிட்டு விட்டோமே என்று தலை குனிந்தார்.

 நீதி: உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு, உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு. நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம். அதனால், யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.