இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியமான பங்காற்றிய வீரரும், கல்வியாளருமான மாளவியாவின் பிறந்த தினம் இன்று.
உத்தரப் பிரதேசம், அலகாபாத்தில் பிறந்தவர். தந்தையிடம் சிறுவயது முதலே சமஸ்கிருதம் கற்றார். ஒரு ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர், சில காலம் தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நான்கு முறை பொறுப்பேற்றவர். லக்னோ உடன்பாட்டின்படி முஸ்லிம்களுக்குத் தொகுதி ஒதுக்கீட்டையும், கிலாபத் இயக்கத்தில் காங்கிரஸ் பங்கேற்பதையும் எதிர்த்தார்.
ஆசியாவிலேயே பெரிய பல்கலைக்கழகமான பனாரஸ் (காசி) ஹிந்து பல்கலைக்கழகத்தை நிறுவினார். நிதி திரட்டுவதற்காக ஹைதராபாத் நிஜாமிடம் பேசினார். வெறுப்பில் நிஜாம் வீசிய செருப்பை அவரிடமே அதிக ஏலத்தில் விற்று பெரும் பணம் பெற்ற திறமைசாலி மதன் மோகன் மாளவியா. ஒருமுறை ஆர்.எஸ்.எஸ் தலைவர் குருஜி இவரை சந்தித்து பேசுகையில், உங்கள் அமைப்புக்கு பணம் வசூலித்துத் தரட்டுமா என கேட்டார் மாளவியா. குருஜியோ பணம் வேண்டாம் நீங்கள் எங்களுடன் இருந்தால் அதுவே போதுமானது என அன்புடன் கூறினார்.