இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஆயத்தமாகும் அரசு.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உதவியாக 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை பதிவேடு கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில், மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், கேட்க வேண்டிய கேள்விகள் குறித்தும் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பு, தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை பதிவு செய்ய வேண்டும். அதில், முதல் 5 கேள்விகள் வீடு தொடர்புடையதாக இருக்கும்.
6 மற்றும் 7-வது கேள்விகள் அந்த வீடு வசிப்புக்கு பகுதியாக அல்லது முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது பற்றியும், 8 முதல் 10-வது கேள்விகள் வீட்டின் தலைவரை பற்றியும், 11 முதல் 31-வது கேள்விகள் வீட்டில் இருக்கும் வசதிகள், பொருட்கள், சாதனங்கள் பற்றியதாக இருக்கும்.