ராஜ்யசபாவுக்கு தேர்வாகிறார் சிந்தியா – ம.பி. வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.,

காங்கிரசிலிருந்து நேற்று முன்தினம் விலகிய, முன்னாள் மத்திய அமைச்சர், ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.,வில் நேற்று இணைந்தார். அவரை, மத்திய பிரதேசத்தில் நடக்க உள்ள, ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளராக, பா.ஜ., அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதல்வர், கமல்நாத் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மூன்று ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல், வரும், 26ல் நடக்க உள்ளது. இதில், காங்கிரசும், பா.ஜ.,வும், தலா ஒரு இடங்களில் வெற்றி பெறுவது உறுதியான நிலையில், மூன்றாவது இடத்தை பிடிக்க, இரு கட்சிகளும் கடும் போட்டியிட்டு வருகின்றன.’எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை கடத்தி, பா.ஜ., குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது’ என, காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால் இதை, பா.ஜ., மறுத்தது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவராக இருந்தவருமான, ஜோதிராதித்ய சிந்தியா, கர்நாடக மாநிலம், பெங்களூரு சென்றார்.அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 22 பேரும், பெங்களூருக்கு, 9ம் தேதி சென்று, ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து, சிந்தியா, நேற்று முன்தினம் டில்லியில், உள்துறை அமைச்சர், அமித் ஷாவை சந்தித்து பேசினார். பின், அமித் ஷாவுடன் சேர்ந்து, பிரதமர், மோடியையும்சந்தித்து பேசினார்.இதையடுத்து, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த சிந்தியா, இது தொடர்பாக, காங்., தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிட்டார்.

இதற்கிடையே, பெங்களூரில் தங்கியிருந்த சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 22 பேரும், தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, ம.பி., கவர்னர் டாண்டன், சபாநாயகர் பிஷாகுலால் சிங் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து, மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு, பெரும்பான்மையை இழந்தது. இந்நிலையில், காங்கிரசிலிருந்து விலகிய சிந்தியா, நேற்று, டில்லி யில், பா.ஜ., தலைவர், ஜே.பி. நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.

பின், சிந்தியா கூறியதாவது:காங்கிரசில், மக்கள் சேவை செய்ய முடியாமல், மிகவும் மனவேதனையுடன் இருந்தேன். காங்கிரஸ், மக்கள் சேவை செய்யும் கட்சியாக இருந்தது ஒரு காலம். ஆனால், இப்போது, அந்தக் கட்சி மாறிவிட்டது, நாட்டின் மிக சிறந்த தலைவர்களில் ஒருவராக, பிரதமர் மோடி உள்ளார். அவரது கரங்களில், நாடு பாதுகாப்பாக உள்ளது மத்திய பிரதேசத்தில், கடந்த, 18 மாத காங்கிரஸ் ஆட்சி, என் கனவுகளை சீரழித்துவிட்டது. பா.ஜ.,வில் இணைந்தது, என் தாய் வீட்டுக்கு வந்த உணர்வை தந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

பா.ஜ., தலைவர், ஜே.பி.நட்டா கூறுகையில், ”பா.ஜ.. வை உருவாக்கிய தலைவர்களில், ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி, விஜயராஜே சிந்தியாவும் ஒருவர். இப்போது, குடும்பத்துடன் இணைந்துள்ள சிந்தியாவை, நாங்கள் வரவேற்கிறோம்,” என்றார். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில், ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளராக, ஜோதிராதித்ய சிந்தியாவை, பா.ஜ., நேற்று மாலை அறிவித்தது. இதையடுத்து, அவர் ராஜ்யசபா எம்.பி.,யாவது உறுதியாகி உள்ளது. ஆட்சி கவிழாது.

இதற்கிடையில், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான திக்விஜய் சிங் கூறியதாவது:மத்திய பிரதேசத்தில், கடந்த, 2018ல் நடந்த காங்., ஆட்சியில், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு, துணை முதல்வர் பதவி வழங்க, முதல்வர் கமல்நாத் விரும்பினார்.ஆனால், இதை ஏற்க மறுத்த சிந்தியா, தன் ஆதர வாளரை, துணை முதல்வராக்க விரும்பினார். இதற்கு, முதல்வர் கமல்நாத் சம்மதிக்கவில்லை. இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்கள், ஆறு பேருக்கு, கமல்நாத் அமைச்சர் பதவிகளை வழங்கினார்.

ராஜினாமா செய்துள்ள, 22 எம்.எல்.ஏ.,க்களில், மூன்று அமைச்சர்கள் உட்பட, 13 பேர், ‘காங்கிரசில் இருந்து விலக மாட்டோம்’ என, உறுதியளித்து உள்ளனர்.அதனால், மத்திய பிரதேசத்தில், காங்., ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டசபையில் கமல்நாத், பெரும்பான்மையை நிரூபிப்பார். காங்கிரசில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, பா.ஜ.,தான் காரணம் என, எல்லாருக்கும் தெரியும். ஆனால், சிந்தியா, கட்சியிலிருந்து விலகுவார் என, நாங்கள் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. பதவி மீதிருந்த அதீத ஆசையே, சிந்தியாவின் இந்த முடிவுக்கு காரணம். காங்கிரசால், சிந்தியாவை, ராஜ்யசபா எம்.பி.,யாக்க முடியும்.

ஆனால், மோடி, அமித் ஷாவால், மத்திய அமைச்சர் பதவியும் வழங்க முடியும். அதனால் தான் சிந்தியா, பா.ஜ.,வில் சேர்ந்துள்ளார். இவ்வாறு, திக்விஜய் சிங் கூறினார். ஜெய்ப்பூரில் முகாம் இதற்கிடையில், மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 90 பேர், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு நேற்று, தனி விமானத்தில் வந்தனர்.விமான நிலையத்தில், அவர்களை, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வரவேற்றார்.ஜெய்ப்பூரில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில், அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் கூறுகையில், ‘கமல்நாத் அரசு நிச்சயம் கவிழாது. நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்’ என்றனர்.

ஒரே குடும்பமாகியுள்ளோம். ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.,வில் இணைந்துள்ளதை வரவேற்கிறேன், பாட்டி விஜயராஜேசிந்தியா வழியில், நடக்க துவங்கியுள்ளார் சிந்தியா. இப்போது, எங்கள்குடும்பம், ஒரே கட்சியை சேர்ந்தகுடும்பமாகிவிட்டது. இது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.வசுந்தரா ராஜே,ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், பா.ஜ.,குவாலியர் மக்கள் ஆதரவுபா.ஜ.,வில் சிந்தியா சேர்ந்துள்ளதை, குவாலியர் மக்கள் பலரும் வரவேற்றுள்ளனர். ஜோதிராதித்ய சிந்தியா,குவாலியர் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்.

இங்குள்ள குணா லோக்சபா தொகுதியில், தொடர்ந்து, நான்கு முறை வெற்றி பெற்றவர், கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தான், குணா தொகுதியில் சிந்தியா தோல்வியடைந்தார். இந்நிலையில், அவர், பா.ஜ.,வில் சேர்ந்துள்ளது பற்றி, குவாலியர் மக்கள் கூறியதாவது:சிந்தியா, காங்கிரசில், கடந்த ஓராண்டுக்கு மேலாகவே புறக்கணிக்கப்பட்டு வந்தார். அதனால், அவர் கடும் அதிருப்தியில் இருந்தார். அவரால், திக்விஜய் சிங் உப்பட, காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை.

இதனால் தான், லோக்சபா தேர்தலில், அவர் தோல்வியடைய நேரிட்டது. காங்கிரசில் இருந்தால், தொடர்ந்து மக்கள் பணியாற்ற முடியாது என்பதால், அவர், பா.ஜ.,வில் சேர்ந்துள்ளார். சிந்தியாவால், பா.ஜ.,வுக்கு பெரும் வலிமை கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர். எனினும், ‘சிந்தியாவின் இந்த நடவடிக்கை, சரியான சந்தர்ப்பவாதம்’ என, சிலர் விமர்சித்துள்ளனர்.