மக்களுக்கு சேவை செய்வதையே முழுமூச்சாகக் கொண்டவர்

ஆர்.எஸ்.எஸ் சாமானியர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த தியாகராஜன் அவர்களைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

ராமசுப்பிரமணியன் -− அலமேலு தம்பதியினருக்கு மகனாக, 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏழாம் தேதி, தூத்துக்குடியில் பிறந்தார், தியாகராஜன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன், ஒரு தங்கை மற்றும் ஒரு தம்பி. தனது பள்ளிப்படிப்பை தூத்துக்குடி எஸ்.ஏ.வி பள்ளியில் தொடங்கி பத்தாம் வகுப்பு வரை அங்கு படித்தார். அதனைத் தொடர்ந்து
பி.யூ.சி படிப்பை, தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி கல்லூரியிலும், இளங்கலை வேதியியல் படிப்பை (பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி) அதே கல்லூரியில் படித்துத் தேர்ச்சிப் பெற்றார். தந்தை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்த சுப்பாராவ் ஜி, தூத்துக்குடியில் உள்ள முனியசுவாமி கோயிலில் ஷாகா நடத்திக் கொண்டு இருந்தார். அங்கே மற்றவர்கள் செய்யும் பயிற்சியைக் கண்டு, தானும் பயிற்சி பெற விரும்பி, தினசரி ஷாகா செல்லத் தொடங்கினார்.
தந்தை ராம சுப்ரமணியன் அவர்கள் காலமானதைத் தொடர்ந்து, அவர் நடத்தி வந்த ஷார்ட் ஹேன்ட், டைப் ரைடிங் கல்வி நிறுவனத்தை நடத்த வேண்டி, ஏழு ஆண்டுகள் வேலை செய்த மாநில அரசுப் பணியை ராஜினாமா செய்தார்.
ஆர்.எஸ்.எஸ் பற்றி அவதூறு கருத்துகளை வேறு மதத்தினர்கள் தியாகராஜன் ஜியின் வீட்டை சுற்றி எழுதி வைத்து மிரட்டல் விடுத்தனர். எனினும் எதற்கும் அஞ்சாமல், எதிர்த்து நின்று சங்கப் பணியை தொடர்ந்து செய்து வந்தார்.
இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை மதுரையில் முடித்தார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ஜில்லாவில் நடைபெறும் அனைத்து சங்கப் பயிற்சி முகாம்களிலும் அலுவலகப் பணிகளை (கார்யாலயம் பிரமுக்) கவனித்துக் கொள்வார். இதனைப் பற்றி தியாகராஜன் ஜி கூறும் போது, “எல்லா முகாமிலும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், தான் ஒரு நடக்க முடியாத மாற்றுத் திறனாளி என்பதால், மற்ற ஊர்களுக்கு செல்ல முடியவில்லை” என, மற்ற ஜில்லா முகாம்களில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையை நம்மிடம் கவலையுடன் தெரிவித்தார்.
தூத்துக்குடி ஜில்லா வியவஸ்தா ப்ரமுக்காக தியாகராஜன் ஜி இருந்த போது, பாஸ்கர் ராவ் ஜி மற்றும் இல கணேசன் ஜி ஆகியோர் இணைந்து தியாகராஜன் ஜியை சந்தித்து, பாரதிய ஜனதா கட்சியில் வேலை செய்ய வழிகாட்டினார்கள். அதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வில் தூத்துக்குடி மாவட்டப் பொருளாளர், மாவட்ட அமைப்புச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் என பல வருடங்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கட்சிப் பணியாற்றினார்.
தூத்துக்குடி மாவட்டம் சேவாபாரதி மாவட்டத் தலைவராகவும், சென்னையில் சேவாபாரதி அலுவலகம் பொறுப்பாளராகவும் இருந்தபோது, சமுதாயத் தொண்டு மீது அதிகளவில் நாட்டம் கொண்டார். பெண்கள் பலன் பெற தையல் வகுப்பு நடத்தினார். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில், 150 சுயஉதவிக் குழுக்கள் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். அதனால் பலர் சுயமாக தொழில் தொடங்கி பலனடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் முதியோர் இல்லம் தொடங்கினார். அங்கே 12 பேர் தங்கள் இறுதிக் காலம் வரை இருந்தனர். அங்கு இயற்கை எய்தியவர்களின் ஈமச்சடங்குகளை, தனது சொந்த செலவிலேயே நடத்தினார்.
தனது நண்பர் ஆதிமூலத்துடன் சேர்ந்து நெல்லையப்பர் என்னும் அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலமாக, தாய் – தந்தை இல்லாத மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த 39 மாணவ- − மாணவியர்களுக்கு அனைத்து வகையான செலவுகளையும் ஏற்றுக் கொண்டு, கடந்த 12 வருடங்களில், திருநெல்வேலி பேட்டையில் உள்ள கலைக்கல்லூரியில் படிக்க வைத்துள்ளார். தற்போது 9 மாணவர்கள் படித்து வருகின்றனர். தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து, சேவாபாரதி சார்பாக இலவச மருந்துகளை வழங்குவார்.
1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி சரஸ்வதி அம்மாளை திருமணம் செய்த தியாகராஜன் ஜிக்கு, அலமேலு என்ற மகளும், ராமசுப்பிரமணியன் என்ற மகனும் உள்ளனர். தனது தாய், தந்தை பெயரையே தனது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்துள்ளார், தியாகராஜன் ஜி.
அகில பாரத பொறுப்பில் இருந்த சேஷாத்ரி ஜி, சூரி ஜி ஆகியோர் தியாகராஜன் ஜியின் வீட்டில் தங்கி உள்ளனர். சங்கத்தின் மூத்த பிரச்சாரக்கான இராம. கோபாலன் ஜி, இல. கணேசன் ஜி, ஸ்ரீ கணேசன் ஜி மற்றும் ஷேத்ர, பிராந்த அதிகாரிகள் பலர், ஜியின் வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.
சங்கப் பணியுடன் சமுதாய பணிகள் பலவற்றை செய்து, நிறையப் பேருக்கு கல்வி செல்வத்தை வழங்கி வரும் தியாகராஜன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.

கட்டுரையாளர்  :  அ. ஓம்பிரகாஷ்