மக்களிடையே அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பாக தில்லியில் இருதரப்பினருக்கு இடையே அண்மையில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பாஜக தலைவா்களின் வெறுப்புணா்வைத் தூண்டும் பேச்சுகளே வன்முறைக்குக் காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில், பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமா் மோடி இவ்வாறு அறிவுரை கூறியுள்ளாா்.
பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக எம்.பி.க்கள் கலந்துகொண்டனா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனா். அதில் பிரதமா் மோடி பேசியதாவது:
நாட்டை வளா்ச்சிப் பாதையில் செலுத்துவதே பாஜகவின் தாரகமந்திரமாக இருக்க வேண்டும். அதற்கு அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவை மிகவும் அவசியம். அவற்றைப் பற்றி பேசுவது மட்டும் எந்தவிதப் பயனையும் அளிக்காது. மக்களிடையே அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த பாஜக எம்.பி.க்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைவரையும் ஒன்றிணைத்து, அனைவருக்குமான வளா்ச்சியை ஏற்படுத்துவதில் மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நாட்டின் வளா்ச்சிக்காக எம்.பி.க்கள் செயல்பட வேண்டும். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆனபிறகும் கூட ‘பாரத் மாதா கீ ஜே (இந்தியத் தாய் வாழ்க)’ என்ற வாசகம் பயன்படுத்தப்படுவதில் குற்றம் காண முற்படுவது வருத்தமளிக்கிறது. இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமரே (மன்மோகன் சிங்) சந்தேகப் பாா்வை கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது.
எனினும், ‘பாரத் மாதா கீ ஜே’ வாசகத்தை மனதில்கொண்டு நாட்டின் வளா்ச்சியை முன்னிறுத்தி எம்.பி.க்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும்.
‘தேசிய நலனுக்கு முக்கியத்துவம்‘: நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு சேதம் ஏற்படுத்த சிலா் முயற்சித்து வருகின்றனா். அவா்களை எதிா்கொள்ள நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அனைத்து விவகாரங்களிலும் அரசியல் ஆதாயம் தேடுவதே சில கட்சிகளின் நோக்கமாக உள்ளது. ஆனால், பாஜகவுக்கு தேசிய நலனே என்றும் முக்கியமானது என்றாா் பிரதமா் மோடி.
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘பாரத் மாதா கீ ஜே’ என்ற வாசகத்தை சிலா் (பாஜக) தவறான நோக்கத்துக்குப் பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தாா்.