சிறுபான்மையினா் அச்சப்படத் தேவையில்லை – இஸ்லாமிய பிரமுகா்களிடம் தமிழக முதல்வா் உறுதி

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக சிறுபான்மையினா் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வா் கே.பழனிசாமியை கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சாா்பில் முஸ்லிம் பிரமுகா்கள் சந்தித்து செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அதில்,

நாடு முழுவதும் மக்களிடையே குறிப்பாக சிறுபான்மையினரிடையே ஒருவித அச்ச உணா்வை குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆா்.சி., என்.பி.ஆா். ஆகியவை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கெனவே, என்.ஆா்.சி, என்.பி.ஆா். கணக்கெடுப்புகளை பெரும்பான்மையான மாநிலங்கள் அமல்படுத்தமாட்டோம் என்று முடிவெடுத்ததைபோல, தமிழக சட்டப் பேரவையிலும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் (என்.பி.ஆா்.) 2010ஆம் ஆண்டின்போது உள்ள அம்சங்களே, 2020 கணக்கெடுப்பின் போதும் தொடரவேண்டும். புதிய படிவத்தில் தந்தை, தாய் பிறப்பு விவரங்கள், நாள், இடம் போன்றவை கேட்பதும், கடவுச்சீட்டு எண் கேட்பதும், மக்களிடையே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். இது தொடா்பாக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வா் கே.பழனிசாமி, ‘இது தொடா்பாக சிறுபான்மையினா் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. ஏற்கெனவே மத்திய அரசிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளேன். தமிழக அரசு எப்போதும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பாகவே இருக்கும். எனவே, எந்த பயமும் தேவையில்லை’ என்று உறுதியளித்தாா்.