பிரதமர் மோடி, நாடு முழுவதும், 11 மொழிகளில் வெளிவரும், தேசிய மற்றும் பிராந்திய பத்திரிகைகளைச் சேர்ந்த, 20க்கு மேற்பட்ட, மூத்த பத்திரிகையாளர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசினார். அதன் விபரம்:
மக்களிடம் அவநம்பிக்கையை ஏற்படுத்தி, எதிர்மறை எண்ணங்களை விதைத்து, வதந்தி பரப்புவோரின் சவாலையும் முறியடிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கி, மக்கள் மனதில் உறுதியை ஏற்படுத்த வேண்டும்.
கிராமம், நகரம் என, நாட்டின் மூலை முடுக்குகளில் தகவல்களை கொண்டு சேர்க்கும் சிறப்பான பணியை, பத்திரிகைகள் மேற்கொண்டு வருகின்றன. அதனால், அவற்றால், வதந்திகளுக்கு எதிரான சவாலை முறியடித்து, சரியான தகவலை குக்கிராமம் வரை கொண்டு சேர்க்க முடிகிறது.
கொரோனா வைரஸ் சோதனை மையங்களையும், அவற்றின் அமைவிடங்களையும் தெரிவிப்பதுடன், யாருக்கு பரிசோதனை தேவை, அதற்கு யாரை அணுக வேண்டும், எவ்வாறு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்களை, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது முக்கியம். ஊரடங்கு உத்தரவின்போது, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களையும், தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
கொரோனா பரவலை தடுக்க, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த பத்திரிகையாளர்களுக்கு, பிரதமர் மோடி இருகரம் கூப்பி நன்றி தெரிவித்தார்.