மகாராஷ்ராவில் புதிய திருப்பம்

மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி அமைப்பு திடீரென அதிரடியாய்  நடந்து முடிந்துள்ளது.  கெடுவான் கேடுநினைப்பான் என்பது பழமொழி அதனை நினைத்து பலமுறை எல்லா கெட்டவனும் நல்லாத்தானே இருக்கிறான் ஒருவனும் பாதிக்கப்பட்டமாதிரி தெரியலியே  என்று வருத்தப்பட்டதுண்டு ஆனால் ஒரே நள்ளிரவில் அதிரடி திருப்பங்களை தந்து அனைத்திற்கும் பதிலடியை தந்த தரமான சம்பவம் என்றால் அது மகாராஷ்டிரா அரசியலில் நடந்த  ஆட்சியமைத்த நிகழ்வே என்றால் அது மிகையாகாது.  நானோ எனது குடும்பமோ எந்த சூழ்நிலையிலும் ஆட்சி அதிகாரத்திற்கான பொறுப்பில் இருக்க மாட்டோம் மாறாக  ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து சாணக்கியனைப்போல ஆலோசனைகளை தந்து வழிநடத்தும் பொறுப்பில் இருப்பேன். ஏனென்றால் இந்த ஆட்சி மக்களால் என்னை நம்பி அளிக்கப்பட்டது. முதன்முதலாக சிவசேனா பா ஜ க கூட்டணி அரசு மஹாராஷ்டிராவில் பதவி ஏற்றபோது சிவசேனையின் தலைவர் பாலாசாகேப் பால்தாக்கரே ஜி சொன்ன வாசகம் இது .

ஆனால் அவரது வழிவந்த அவரது உத்தமபுத்திரனான உத்தவ் தாக்கரே எல்லாவற்றையும் மீறி தனது புதல்வனை எப்படியாவது முதல்வராக ஆக்கி மஹாராஷ்டிராவை தனது கைக்குள் வைத்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டதன் விளைவு சிவசேனையை சோனியாவின் சேனையாக்க ஆக்கும்அளவுக்கு கீழிறங்கி அவர்களது ஆதரவுடன் ஆட்சியமைக்க முப்பது ஆண்டுகால நட்பை முறித்து கொண்டது . குருடனான திருதராஸ்டன் தனது செல்லமகனான துரியோதனனின் ஆசைக்கு எல்லாம் இணங்கி தர்ம  நியாத்தை  கேலிக்கூத்தாக்கியதன் விளைவு மஹாபாரத போர் நடைபெற்றது முடிவில் எல்லாம் மண்ணோடு மண்ணானது . நூறு புதல்வர்களையும் போரில் பறிகொடுத்து கடைசிக்காலத்தை மனவருத்தத்துடன் முடித்துக்கொள்ள நேரிட்டது . முதலிலேயே தனது மகனின் ஆசை சரியல்ல அது பேராசை அது நடக்க வாய்ப்பில்லை என்று மறுக்காமல் அவனது ஆசைப்படியே நடந்துகொள்ள சம்மதித்ததன் விளைவு பின்நாளில் அவன் எந்த சூழ்நிலையிலும் தந்தை உட்பட எந்த பெரியவர்களின் சொல்லுக்கும் மதிப்பளிக்காது வாழ்ந்து வீழ்ந்து போனான் அதே நிலைமைதான் சிவசேனையின் உத்தவ் தாக்கரேக்கும் இன்று நிகழ்ந்துள்ளது.

தாக்கரேவின் அக்கா மகனான ராஜ்தாக்கரே சிவசேனையில் முன்னணி தலைவராக வருவதை கண்டு பொறாமையால் எதிர்த்து பால்தாக்கரேவின் ஆசியுடன் வெற்றிகரமாக அதனை முறியடித்து சிவசேனையின் முக்கிய தலைவராக உருவெடுத்தார் உத்தவ் தாக்கரே . பின்னாளில் ராஜ்தாக்கரே தனியாக நவநிமான் சேனை என்றோரு புதிய அமைப்பை ஏற்படுத்தி கொண்டு தனியேஒருவழியில் பயணிக்கிறார் . பலமுறை சிவசேனை பிளவு  கண்டபோதும் அமைதியாக அது அவர்களின் உள்கட்சி விவகாரம் என்று ஒதுங்கி  உள்கட்சி சண்டையில் தலை இடாமல் அமைதிகாத்து ஒவ்வொரு முறையும் சிவசேனைக்கு உற்ற நண்பனாக பா ஜ க விளங்கியது. முன்னாள் முதல்வர் மனோகர்ஜோஷி கட்சியில் இருந்து விலகினார்கள்  . பின்னாளில் அடுத்த முதல்வராக இருந்த நாராயண ரானே விலகினார் அதற்கு முன்பு சஜன் புஜ்பல் , சஞ்சய் நிருபம் போன்ற முன்னணி தலைவர்கள் விலகினார் அவர்கள் அனைவரும் முதலில் கதவை தட்டியது பா ஜ  கவை தான்   அனால் அவர்கள் யாரையும் கட்சிக்குள் அனுமதிக்காது கூட்டணி தர்மத்தை  பேணியது பா ஜ க . அதனால் அவர்கள் எல்லோரும் எதிர் சிந்தனை  கொண்ட காங்கிரஸில் ஐக்கியமாகி அதன்முன்னணி தலைவர்களாக உருவெடுத்தனர்.

இதனை எல்லாம் மறந்து தனது சுயநலத்துக்காக பா ஜ கவை தனது ஜூனியர் பார்ட்னர் ஆகவே வைத்து கொள்ளலாம் என்ற இருமாப்பில் சென்ற 2014 சட்டமன்ற தேர்தலில்  சரிபாதி இடங்களில் போட்டியிடலாம் என்ற கோரிக்கையை நிராகரித்தது அதனால் தனித்து போட்டியிட்ட பா ஜ க  122 இடங்களுடன் முதலிடத்திலும் 66 இடங்களுடன் சிவசேனை இரண்டாமிடத்தையும் கைப்பற்றியது . பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் கூட்டணிக்கு வந்த சிவசேனை ஐந்து ஆண்டுகளும் ஒரு மாமியாரைப்போல் கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்று உள்ளே இருந்து கொண்டே எல்லா உள்ளடி வேலைகளையும் செய்து கொண்டே  இருந்துது . இந்த சட்டமன்ற தேர்தலிலும் முக்கிய சட்டசபை தொகுதிகளை எல்லாம் தனக்கே வேண்டும் என்று அடம்பிடித்து கேட்டு வாங்கி அவற்றிலெல்லாம் தானும் தோற்று பா ஜ கவையும் தோற்கடித்தது . இதனால் சென்ற தேர்தலில் தனித்து நின்று 122 இடங்களில் வென்ற பாஜக இந்த தேர்தலில் கூட்டணிசேர்ந்தும் 105 இடங்களில் மட்டுமே வெல்லமுடிந்தது . இருந்த போதிலும் கூட்டணி தர்மத்தை ஏற்று  ஆட்சியமைக்க முயன்ற போது பாஜகவை விட சரிபாதி இடங்களிலேயே வெற்ற சிவசேனை முதல்வர் பதவி கேட்டு அடம்பிடித்தது . ஆட்சியில் 50:50
என்று முன்பு பேசியது முதல்வர் பதவியையும் சேர்த்துதான் என்று பின்னாளில் எகத்தாளம் பேசியது சிவசேனைஆதரிக்கும் நபர்களால்  மட்டுமே மஹாராஷ்டிரத்தில்  ஆட்சியமைக்கமுடியும் என்றெல்லாம் கொக்கரித்தது .

 பா ஜ கவிடம் தனது பேரம் படியவில்லை என்றதும் சிவசேனை துவங்கியது முதல் எதிர்த்து அரசியல் செய்துவந்த காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது . ஏற்கனவே மும்பை பி  எம் சி வங்கி மோசடியில் சிக்கி எப்போது என்ன நிகழுமோ என்று இருந்த சரத்பவார், எல்லா மாநிலங்களிலும் அடிவாங்கி சின்னாபின்னமாகி போயுள்ள காங்கிரஸ் வருவாய் அதிகமுள்ள ஒருமாநிலத்தின் ஆட்சி வலிய வந்து கிடைக்கும் போது வேண்டாம் என்று சொல்லுமா. விடாதே பிடி என்பதுபோல் கூட்டணிக்கு இசைந்தது . அதையும்  உடனடியாக சொல்லிவிட்டால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்று தான் பேசிமுடிக்க வேண்டிய பேரங்களையெல்லாம் பேசி முடித்து இறுதியாக காரியக்கமிட்டியை கூட்டி  ஒப்புதலுடன் இசைவை அறிவித்தது
கூட்டணி அரசுக்கு குறைந்தபட்ச செயல் திட்டம் ஓன்று இருக்க வேண்டும். அதிகாரத்தை முறையாக பிரித்து கொள்ளவேண்டும். சிவசேனை கூட்டணியை தர்மசங்கடத்துக்குள்ளாக்காமல் இருக்க இந்துத்துவ கருத்துக்களுக்கு விடைசொல்லவேண்டும். குறிப்பாக மஹாராஷ்டிரத்தின் இந்துத்துவ  நாயகனான வீரசவர்க்கரை பற்றி வாயே திறக்கக்கூடாது . மேலும் சிறுபான்மை மக்களின் நல்லாதரவை பெற சென்ற காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 7% இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது போன்ற பல  கோரிக்கைகள் சிவசேனையின் முன் வைக்கப்பட்டது அவற்றையெல்லாம் முதல்வர் பதவி என்ற ஒரு விஷயத்திற்காக ஒப்புக்கொண்டது  காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி முதல்வர் துணைமுதல்வர் அமைச்சரவையில் யார்யாருக்கு எவ்வளவு இடங்கள் என பங்கிட்டு கொண்டு குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி ஆட்சியமைப்போம்  என்றெல்லாம் கடந்த 15 நாட்களாக பேசிவந்தது இதற்காக காங்கிரஸின் சோனியா முதல் எல்லோரிடமும் பேசிவந்தார். எல்லாவற்றையும் அமைதியாக கவனித்து வந்த பாஜக ஒரேநாள் இரவில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தது ஏற்கனவே நிதின் கட்கரி சொன்னது போல் நடப்பது கிரிக்கெட் ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று சொன்னது போல் தனது ராஜதந்திர ஆட்டத்தை தொடங்கியது.
 டிசம்பர் முதல்வாரத்தில் ஆட்சி அமைப்பார்கள் என்று அறிவிப்பு  வெளியான சிலமணி நேரங்களிலேயே தேசியவாத காங்கிரஸின் அஜித்பவாருடன் சேர்ந்து பாஜக அரசு பதவி ஏற்றுள்ளது அனைத்து அரசியல் வல்லுனர்களின் கணிப்புக்களையும் மீறி அதிசயம் போல் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது.இதோடு ஒழிந்தது பாஜக என்றெல்லாம் மனப்பால் குடித்தவர்கள் முகத்தில் கறியை பூசிக்கொண்டது போல் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்தது .இன்னும் 25 ஆண்டுகளுக்கு சிவசேனையே ஆட்சியில் இருக்கும் என்று தோளைத்தட்டி வீதிக்கு வந்து மார்தட்டிய  சஞ்சய்ராவத்  இன்னும் கொஞ்சம் நாளைக்கு தனது சகுனித்தனத்திற்கு விடைகொடுப்பர் என்று நம்பலாம் . கூடவே இருந்து குழிபறிக்கும் துரோகிகளுக்கு இனி மகாராஷ்டிரா அரசியல் வாழ்க்கை இல்லை என்பது சிவசேனைக்கு புரிய வைக்கப்பட்டுள்ளது .
எல்லாவற்றிக்கும் மேலாக மஹாராஷ்டிரத்தின் இந்துத்வ நாயகனான வீரசாவர்கரின்  வார்த்தையில்  சொல்லவேண்டுமானால் வந்தால் உன்னோடு வராவிட்டால் நான் தனியாக …  எதிர்த்தால் உன்னையும் வென்று  இதைத்தான் மகாராஷ்டிரத்தில் பாஜக செய்து காட்டியுள்ளது.  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை அமித் ஷா தனது ராஜதந்திர நடவடிக்கையால் மகாராஷ்டிர அரசியலிலும் சாதித்து காட்டியுள்ளார்  சத்திரபதி சிவாஜி மகாராஜாவை பற்றி சொல்லும்போது அசாத்திய சாதாவே என்று சொல்லுவது வழக்கம் அதாவது நடக்காது ,முடியாது என்று இருப்பதை நடத்திக்காட்டுவது என்பது அதன் பொருள் இன்று அமித் ஷா அதனை சிவாஜியின் வழிநடப்பதாக சொல்பவர்களுக்கே செய்து காட்டியுள்ளார் என்பதுதான் உண்மை