மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிர அரசியலில் எதிா்பாராத திருப்பமாக, பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க தீா்மானித்திருந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவாா் மேற்கொண்ட முடிவு அந்தக் கூட்டணிக்கு பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தேவேந்திர ஃபட்னவீஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன.

இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இடைக்கால பேரவைத் தலைவர் நியமிக்கப்பட்டு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை மறைமுகமாக இல்லாமல் நேரடியாக நடத்த வேண்டும். மேலும் இதனை ஊடகங்களில் நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கியம்சங்கள்..

  • மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எத்தனை எம்எல்ஏக்ளின் ஆதரவு உள்ளது என்பதை சட்டப்பேரவையில் பட்னவீஸ் அரசு நிரூபிக்க வேண்டும்.
  • நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வசதியாக, இன்று மாலைக்குள் இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும்.
  • அவையின் மிக மூத்த உறுப்பினரை இடைக்கால சபாநாயகராக நியமிக்க வேண்டும்.
  • நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை விடியோ பதிவு செய்ய வேண்டும்.
  • ஜனநாயகத்தின் மாண்புகளை காக்க நீதிமன்றங்கள் கடமைப்பட்டுள்ளன.
  • ஜனநாயக மாண்புகளைக் காக்கும் பணி அரசியல் கட்சிகளுக்கும் உண்டு.
  • நாளை மாலை 5 மணிக்குள் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொள்ள வேண்டும்.
  • நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்தக் கூடாது.
  • நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பு தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட வேண்டும்.
  • எம்எல்ஏக்கள் பதவியேற்பு முடிந்து நாளை மாலை 5 மணிக்குள் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, ஃபட்னவீஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.