உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை அருகே உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூரில், 1899 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ம் தேதி கிருஷ்ணசாமி – முத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் நாராயணசாமி என்பதாகும்.
உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி, மேடை தோறும் முழங்கியவர். ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின், பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சமுதாயப் பாடல்களை எழுதி, அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார். ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி, இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல் திறமையும் மிக்கவர்.
இளம் பருவத்தில் இவருக்கிருந்த கலை ஈடுபாடே பிற்காலத்தில் திரைத் துறையில் ஈடுபட வழிகாட்டியாய் அமைந்தது. அக்காலத்தே நாடகத் துறையில் புகழ்பெற்றுச் சிறந்த மதுரை சங்கரதாஸ் சுவாமிகளின் நெருங்கிய நண்பராக இருந்தவர். உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயரின் ‘ஆரிய கான சபா’ என்னும் நாடக மன்றத்தின் ஆசிரியராகவும் இருந்தார்.
ஒருமுறை மதுரை நாடகச் சங்கத்தார். இவரின் கலைத்திறத்தைப் பாராட்டி வழங்கிய ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்களாகவே வாங்கினார். அப்போது ஊரில் உள்ள கடன் நினைவுக்கு வரவே மீண்டும் பொருளீட்டினார். ஈட்டிய பணத்துடன் சென்று, தன் ஊருக்கு வெளியே நின்று கடனையெல்லாம் அடைத்த பிறகே ஊருக்குள் நுழைந்தார்.
அந்நாளில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனை விட, அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயண கவியாவார். உடுமலை நாராயணகவி, தம் 82வது வயதில், 1981ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி மறைந்தார். மத்திய அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில், 2008 டிசம்பர் 31ல், அஞ்சல் தலை வெளியிட்டது. தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த உடுமலைப்பேட்டையில், நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.