பாரத அயலுறவின் புதிய பரிமாணம்!
பாரத நாட்டின் நெடிய ஆன்மிக வரலாற்றில் பௌத்த மதத்தின் கோட்பாடுகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. பாரத நாட்டில் தோன்றிய நெறிமுறையான பௌத்த மதம் உலகெங்கும் அதிலும் குறிப்பாக ஆசிய நாட்டின் பல பகுதிகளிலும் பரவி வேரூன்றியுள்ளது. புத்தரின் தாய்வீடு என்பதால் பாரத நாட்டின் மீது பல ஆசிய நாட்டு மக்களுக்கும் மிகுந்த மரியாதை உண்டு. நேபாளம், இலங்கை, மியான்மர் என்று நீண்டு ஜப்பான் வரை புத்த மதத்தைப் பின்பற்றுவோர் கணிசமாக உள்ளனர்.
பௌத்த மதம் சாதி வேற்றுமையை களைவதிலும் ஏழை பணக்காரன் ஏற்றத் தாழ்வை போக்குவதிலும் பெரும்பணி ஆற்றுகிறது. இவையெல்லாம் மக்கள் ஆட்சியின் அடிப்படைகளை வலுவாக்கின. பல ஆசிய நாடுகளிலிருந்தும் பௌத்த மதத்தினர் புத்த கயா, சாஞ்சி, சாரநாத், நாளந்தா போன்ற தலங்களுக்கு ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொண்டு ஆன்மிக எழுச்சியும் புத்துணர்வும் பெற்று செல்கின்றனர். இந்த உண்மைகளை எல்லாம் மனதில் கொண்டுதான் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமைப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களிலேயே தன்னுடைய பௌத்த பூமியான ஜப்பான் பயணத்தின் போதே ஆன்மீக ராஜதந்திரத்தைத் துவக்கி விட்டார்.
முந்தைய அரசின் ‘கீழை நாடுகளை நோக்கி கவனம்’ (Look East Policy) என்ற கொள்கை இன்று மேலும் வலுவாகி ‘கீழை நாடுகளுடன் ஆக்கபூர்வமான செயல்பாடு’ (Act East Policy) என்று புதிய பரிணாமம் பெற்றுள்ளது. இந்த உத்தி, சிறிது சிறிதாக பாரத நாடு ஆசிய நாடுளின் தலைமை ஏற்படும் சூழலை இயற்கையாகவே கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை. அணுகுமுறை மென்மையானதாக இருக்கலாம், ஆனால் விளைவு வலிமையானதுதான் – இது தான் ‘மென்மையான உந்து சக்தி’ (Soft Power) என்பது.
மங்கோலிய நாட்டு பௌத்த மடாலயங்களின் புனர்நிர்மாணத்திற்கு மோடி அரசு பொருள் உதவி செய்கிறது. ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடைப்பட்ட இந்த நாட்டிற்கு விஜயம் செய்த முதல் பாரத பிரதமர் மோடிதான்.
வியட்நாம் நாட்டின் ‘க்வாங்க் நாம்’ மாநிலத்தில் சிதிலமடைந்த புராதனமான ஒரு கோயிலை, பாரத அரசு தொல்லியல் துறை துணையுடன் புனரமைக்க அந்த நாட்டு அரசிற்கு உதவிபுரிகிறது. வியட்நாமின் பிரதமர் டிரான் தாய் க்வாங்க், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘உணர்வு பூர்வமாக’ கூடுதல் ஆதரவும் கிடைக்கிறது.