பொறியியல் மாணவர்கள் மூலம், பெங்களூரு உட்பட, தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களை தகர்க்க, பெங்களூரு சி.சி.பி., போலீஸ் பிடியில் உள்ள அல் – உம்மா பயங்கரவாதி மெகபூப் பாஷா, பயங்கரவாத பயிற்சி அளித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாத செயல்கள் மூலம், தென் மாநிலங்களை தகர்க்க, அல் – உம்மா பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது. பெங்களூரில் பதுங்கியிருந்த ஹனிப்கான், இம்ரான்கான், முகமது சையது ஆகிய மூன்று பயங்கரவாதிகளை, சி.சி.பி., போலீசார், மூன்று வாரங்களுக்கு முன் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, கர்நாடக மாநிலத்தின், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த, அல் – உம்மா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மெகபூப் பாஷா, அவர் தங்குவதற்கு இடமளித்த மதகுரு சதாகத் உல்லாகான் ஆகிய இருவரும், 11ம் தேதி, கைது செய்யப்பட்டனர்.
இதில், மெகபூப் பாஷாவிடம், பெங்களூரு சி.சி.பி., போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, சுத்தகுண்டேபாளையாவில் தங்கியிருந்து, சிறுபான்மை பொறியியல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்து, பெங்களூரு நகரை தகர்க்க சதி திட்டம் தீட்டியது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தங்கள் பயங்கரவாத அமைப்புகளை விரிவுப்படுத்தி, அங்குள்ள பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது.
இதற்காக, மெகபூப் பாஷா, பெங்களூரு புறநகர் மற்றும் குடகு மாவட்டத்தின் மடிகேரி வனப்பகுதிகளில் பயிற்சி அளித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் பயங்கரவாத பயிற்சி பெற்றவர்களை, சி.சி.பி., போலீசார் தேடி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல் வெளி வந்து கொண்டே இருப்பதால், தேசிய புலனாய்வு படையினர், மெகபூப் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.