பொது சிவில் சட்டம் அவசியம்;- பிரதமர் மோடி வலியுறுத்தல்

பாஜக சார்பில் ‘எனது பூத், வலிமையான பூத்’என்ற பெயரில் கட்சி தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் இருந்து 3,000 பாஜக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, மத்திய பிரதேச தலைநகர் போபாலில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளை சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் காணொலி வாயிலாக அவரது உரையை கேட்டனர். பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: எகிப்து, பாகிஸ்தான், இந்தோனேசியா, கத்தார், ஜோர்டான், சிரியா, வங்கதேசம் ஆகிய முஸ்லிம் நாடுகளில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் பாஜக ஆட்சிக் காலத்தில் முத்தலாக் விவகாரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே முஸ்லிம் பெண்கள் எங்களோடு இணைந்து உள்ளனர்.

பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி, கணவன், மனைவி, மகன், மகள் என பல உறுப்பினர்கள் உள்ளனர். அந்த குடும்பத்தை சேர்ந்த ஓர் உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டத்தையும் பின்பற்ற முடியுமா? அவ்வாறு இரு சட்டங்களை பின்பற்றினால் அந்த குடும்பத்தை நடத்த முடியுமா? இந்த கருத்தை நமது நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுகிறேன். இருவிதமான சட்டங்களால் நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்ப பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்.

முத்தலாக் நடைமுறையால், நம் இஸ்லாமிய சகோதரிகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகினர். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகத் தான், ‘முத்தலாக் சட்டவிரோதம்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இங்குள்ள சிலர், ‘முத்தலாக் நடைமுறையை இஸ்லாத்தில் இருந்து பிரிக்க முடியாது’ என்கின்றனர். அப்படியானால், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் எகிப்து, இந்தோனேஷியா, சிரியா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் முத்தலாக் முறை, ஏன் நடைமுறையில் இல்லை என்பதை அவர்களால் கூற முடியுமா? நம் நாட்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, முத்தலாக் நடைமுறைக்கு சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதன் வாயிலாக இஸ்லாமிய சகோதரிகளுக்கு அவர்கள் அநீதி இழைக்கின்றனர். பெரிய நம்பிக்கையுடன் புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண், முத்தலாக் நடைமுறையால் பிறந்த வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவதால், அந்த பெண்ணின் மொத்த குடும்பமும் பாதிக்கப்படுகிறது. திருமணம், விவாகரத்து, சொத்து உரிமை போன்ற விஷயங்களில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதைத் தான் நம் அரசியலமைப்பு சட்டமும், உச்ச நீதிமன்றமும் வலியுறுத்துகின்றன. ஆனால், சில கட்சிகள் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஒரே குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் வெவ்வேறு விதமான சட்ட திட்டங்கள் இருந்தால் எப்படி இருக்கும். அதேபோல் இரண்டு விதமான சட்டங்கள் இருந்தால், நாடு எப்படி இயங்க முடியும்? ஓட்டு வங்கி அரசியல் செய்யும் கட்சிகள், இஸ்லாமியர்கள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. அப்படி செய்திருந்தால், கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இஸ்லாமியர்கள் பின்தங்கியிருக்கமாட்டார்கள். இந்த கட்சிகளால், நம் பஸ்மந்தா இஸ்லாமிய சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையே பாதிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.