பொங்கல் விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்

சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேடு, ஸ்ரீ நவசக்தி கடம்பாடி சின்னம்மன் கோவிலில், 11ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் மோகன் பாகவத், தென் பாரத தலைவர் வன்னியராஜன், மாதவரம் கிராம சங்க தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோயிலுக்கு வந்த மோகன் பாகவத்திற்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பின்னர் கோயில் வளாகத்தில் நடந்த, கோபூஜை, பொங்கல் விழாவில் கலந்துகொண்டார். சிறுவர்கள் விளையாட்டு போட்டிகளை கண்டுகளித்தார்.

உங்கள் அனைவருக்கும், பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாரதம் முழுக்க பொங்கல் கொண்டாடப்பட்டாலும், தமிழகத்தில், மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுவது சிறப்பு.. முன்னர், திருப்பூரில் மாட்டுப்பொங்கல் விழாவில் பங்கேற்றேன். இன்று சென்னையில் உங்களுடன் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறேன்.

நாம் யாரை நோக்கி பூஜை செய்கிறோமோ நாமும் அவர்களை போல ஆக முயற்சிக்க வேண்டும். சூரியன் ‘தவ’ சொரூபம். தொடர்ந்து ஓய்வின்றி உழைக்கிறார். நாமும் ஓய்வின்றி உழைக்க வேண்டும். நமக்கு கோமாதா அளிக்க கூடிய உதவிக்கு நன்றி செலுத்தவே கோ பூஜை செய்கிறோம். காணும் பொங்கல் அன்று உறவினர்கள், நண்பர்கள், நமக்கு உதவக்கூடிய அனைவருக்கும் நாம் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். மற்றவரை காயப்படுத்தும் கடும் சொற்களை எப்போதும் பேசக்கூடாது. அதைத்தான், ‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு’ என்ற குறள் நமக்கு உணர்த்துகிறது என மோகன் பாகவத் பேசினார். முன்னாள் கிராம சபை தலைவர் பாலசுப்ரணியம் நன்றியுரை ஆற்ற விழா இனிதே நிறைவு பெற்றது.