பெங்களூரு ‘ராமேஸ்வரம் கபே’ குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முஜாமில் ஷரீபை, ஏழு நாட்கள் என்.ஐ.ஏ., காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துஉள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கபே உணவகத்தில், இம்மாதம் 1ம் தேதி இரு குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., விசாரணை நடத்தி வருகிறது. கர்நாடகா, தமிழகத்தில் மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஷிவமொகாவின் முஸவீர் ஹுசைன் ஷாஜிப், அப்துல் மதின் அகமது தாஹா ஆகியோர் தான், குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளிகள் என்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களுக்கு வெடிகுண்டு தயாரிக்க கச்சா பொருட்களை சப்ளை செய்து உடந்தையாக இருந்ததாகக் கூறி, முஜாமில் ஷரீப் என்பவர் மூன்று நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். இவர் பெங்களூரு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வெடிகுண்டு தயாரிக்க கச்சா பொருட்கள் சப்ளை செய்தது, முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால், கூடுதல் விசாரணைக்கு ஏழு நாட்கள் காவல் வழங்கும்படி என்.ஐ.ஏ., தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், முஜாமில் ஷரீபை ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. ரகசிய இடத்தில் வைத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இவர், சிக்கமகளூரு மாவட்டம், கலசா பகுதை சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் துபாயில் உள்ளனர். 16 ஆண்டு களுக்கு முன், வேலை தேடி பெங்களூரு வந்துஉள்ளார்.
பசவேஸ்வர நகரின் ஹவனுார் சதுக்கத்தில் உள்ள சிக்கன் கவுண்டி என்ற உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளார். வெடிகுண்டு தயாரிக்க கச்சா பொருட்கள் சப்ளை செய்தது மட்டுமின்றி, குண்டு வெடிப்புக்குப் பின், முக்கிய குற்றவாளி தப்பிக்க உதவியதும் விசாரணையில் ஒப்புக்கொண்டு உள்ளார்.