‘ஜம்மு – காஷ்மீரின், புல்வாமாவில் நடத்திய தாக்குதல் போல், இந்தியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு உருவாக்கியுள்ள, ‘கஸ்னாவி படை’ சதித் திட்டம் தீட்டியுள்ளது’ என, உளவுத் துறை எச்சரித்துள்ளது.
ரிசர்வ் போலீஸ் படை:
ஜம்மு – காஷ்மீரில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில், தடை செய்யப்பட்டுள்ள, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்புக்கு பெரும் பங்கு உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி, 14ல், ஜம்மு – காஷ்மீரின், புல்வாமாவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதி தான் காரணம்.
பாகிஸ்தானை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, புதிதாக, ‘கஸ்னாவி படை’ என்ற புதிய பிரிவை உருவாக்கி உள்ளது. இதில், லஷ்கர், ஹிஸ்புல், அல் பதார் உட்பட பல அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இடம் பெற்றுள்ளனர்.
தாக்குதல்:
இது பற்றி, உளவுத்துறை கூறியதாவது: இவர்கள், இந்தியாவில், பாதுகாப்பு படையினரை குறி வைத்து தாக்குதல் நடத்த, சதித் திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த ஆண்டு, புல்வாமாவில் நடத்தியதைப் போல், பாதுகாப்பு வீரர்களின் வாகனங்கள், முகாம்கள், எல்லையில் உள்ள கண்காணிப்பு நிலையங்கள் மீது, வெடிகுண்டு வீசி தாக்கவும், தற்கொலை படை தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு உளவுத்துறை கூறியது.
இதையடுத்து, ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், ஜெய்ஷ் பயங்கரவாதிகள், 27 பேருக்கு தீவிர பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக, உளவுத்துறை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.