சில ஆண்டுகளுக்கு முன், ஜப்பானின், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் நடந்த, ஒரு பயிற்சி பட்டறையில் பங்கேற்க சென்றிருந்தேன். ஒரு நாள் மாலை, அப்படியே காலாற நடந்தபடி, நகரை சுற்றிப் பார்க்கலாம் என்று ஆசை.தங்கியிருந்த ஓட்டல் அறையில் இருந்து புறப்பட்டு, வேடிக்கை பார்த்தபடியே நடந்தேன்.
சற்றும் எதிர்பாராத தருணத்தில், கால் இடறி கீழே விழுந்ததில், ‘பேன்ட்’ கிழிந்து, காலில் சிராய்ப்புகள்; கடுமையான காயம் இல்லை என்றாலும், மேல் தோல் வழித்துக் கொண்டு வந்ததில், லேசான ரத்த காயம்.’ஆயின்மென்ட்’ வாங்கி தடவலாம் என, மருந்தகத்திற்கு சென்றால், யாருக்குமே ஆங்கிலம் புரியவில்லை. பல கடைகள் ஏறி இறங்கியும், நான் கேட்பது அவர்களுக்கு புரியவில்லை.
பேன்ட் கிழிந்த நிலையில், நான் இருந்த கோலத்தை பார்த்து பரிதாபப்பட்டு, சிலர் சில்லரைகள் கொடுத்தனரே தவிர, ஒருத்தர் கூட மருந்து கொடுக்கவில்லை.பின், பல்கலைக் கழகம் வந்து, காயத்திற்கு மருந்திட்டேன். காலில் ஏற்பட்ட காயத்தை விட, அந்த அனுபவம் எனக்கு, மிகுந்த மன வேதனையை தந்தது.
நம் நாட்டில், படிப்பறிவில்லாத பலர், தினம் தினம் இப்படி தானே வேதனைகளை அனுபவிக்கின்றனர் என்ற நினைப்பு, மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. இது போன்ற சந்தர்ப்பங்களில் எனக்கும், அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றே தோன்றியது.
நிர்வாகவியல் பேராசிரியர் என்ற பதவி, பாக்கெட் நிறைய அமெரிக்க டாலர்கள், கடன் அட்டைகள் வைத்திருந்தும், அவர்கள் பேசும் மொழி தெரியாததால், என் தோற்றத்தை கண்டு, பிச்சைக்காரன் என்று நினைத்துவிட்டனர். இதே போல, டில்லி, உத்தர பிரதேசம், பெங்களூரு போன்ற நகரங்களில், தமிழர்கள் மொழி தெரியாமல் பொது இடத்தில் தவிப்பதை, பலமுறை பார்த்துஉள்ளேன்; அப்போதெல்லாம், அவர்களுக்கு உதவி இருக்கிறேன்.
‘தமிழக அரசியல் தலைவர்கள், தங்களை பல ஆண்டுகளாக, மொழி அறிவு அற்றவர்களாகவே வைத்துள்ளனர்’ என, அவர்கள் வசைமாறி பொழிவதையும் கேட்டிருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில், மொழி தெரியாத தமிழக அரசியல்வாதிகளுக்கும், நான் உதவி இருக்கிறேன். அவர்கள் அசட்டுத்தனமாக ஒரு புன்னகையை சிந்திவிட்டு நடையை கட்டுவர்.
பாவம், அவர்கள் யாரை குற்றம் சொல்வது. பள்ளிக் கல்வியில், பல சீரிய திட்டங்களை கொண்டு வந்த, முன்னாள் முதல்வர் காமராஜர், இது போன்ற ஒரு நிலைமை ஏற்படும் என, கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.
இது மக்கள் முடிவா?
‘தேசிய கல்விக் கொள்கை – 2020’ அறிவிக்கப்பட்ட உடன், மும்மொழிக் கொள்கை என்ற வார்த்தையை பிடித்துக் கொண்டு, எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும், தங்கள் பழைய கொள்கைகளை துாசு தட்டி எடுத்து, ஹிந்தி எதிர்ப்பு, சமஸ்கிருதம் கூடாது என, கூச்சலிட துவங்கினார். அதனால், ஆளும் கட்சியினரும் வேறு வழியின்றி, தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என, அவசரமாக அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
கல்விக் கொள்கை என்பது, மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம். எனவே தான், 1986க்குப் பின், அதில் கைவைக்க, எந்த அரசுக்கும் துணிச்சல் வரவில்லை.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. அதில், மொழி தொடர்பான விவகாரம், தற்போது விவாதப் பொருளாகி இருப்பதால், அதைப் பற்றி பேச விரும்புகிறேன்.
மொழிக் கொள்கை என்பது, மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களின் எதிர்காலம் மீது, நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அப்படி இருக்கையில், இவ்விவகாரத்தில், அவர்களது கருத்துகளை மத்திய அரசு கேட்க வேண்டுமா அல்லது எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்க வேண்டுமா…
ஒருபுறம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சொந்தமாக நடத்திக் கொண்டே, மறுபுறம் மக்களை உணர்வு ரீதியாக துாண்டிவிட்டுக் கொண்டிருக்கும், சில அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் முரணாக தெரியவில்லையா?
தாய்மொழிக் கல்வி
இந்த புதிய கல்விக் கொள்கை, தற்போதைய காலத்திற்கு ஏற்ப, மாணவர்கள் தங்களுக்கு தேவையான மொழியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அளிக்கிறது. மூன்று மொழிகளை தேர்ந்தெடுக்கும் அவர்கள், ஏதாவது ஒரு மொழியில், இலக்கிய புலமை பெற வேண்டியது அவசியம் என்ற நிபந்தனையை விதிக்கிறது.
எந்த இடத்திலும், அந்த மொழி ஹிந்தியாக இருக்க வேண்டும் என கூறப்படவில்லை. ஆனால், மாணவர்கள் ஹிந்தியை தேர்வு செய்து விடுவரோ என்ற அச்சத்தை காண முடிகிறது. மாணவர்களுக்கு, ஐந்தாம் வகுப்பு வரை, தாய்மொழியில் கல்வி, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு வரை, தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், தாய்மொழியில் பாடங்களை படிக்கும் போது, எளிதாகவும், வேகமாகவும் கற்க முடியும் என்ற நோக்கத்திலேயே, இப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில், மற்ற பாடங்களை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவதை போல, மொழியையும் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
இதை தாண்டி, நாம் வேறு என்ன கேட்க முடியும்.தங்கள் மாநில மொழி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே, அனைத்து மாநிலங்களின் நோக்கமாக உள்ளது. அதற்கு வழி செய்யும் வகையில் தான், இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாநிலம், மற்ற மாநில மொழியை ஊக்குவிக்கும் போக்கையும், இந்த திட்டம் உறுதி செய்யும்.
எனவே, நம் மொழியின் வலிமை மீது நம்பிக்கை வைத்து, இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது. தமிழ் மற்றும் தமிழகத்தின் சிறப்புகள் குறித்து, நம் அரசு பாடத்திட்டங்களை தயார் செய்து, அதை மற்ற மாநில மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதை விடுத்து, இருமொழிக் கொள்கையில் நாம் பிடிவாதம் காட்டினால், மற்ற மாநிலங்கள், தமிழை வரவேற்காது.
மொழிப் பாடங்கள்
இதில், பெற்றோருக்கு நிறைய கேள்விகள் இருக்கும். குறிப்பாக, அடிக்கடி பணியிட மாறுதலுக்கு ஆளாகும் பெற்றோருக்கு, மொழிப்பாட தேர்வில், பல கேள்விகள் இருக்கும். எனவே, அப்படிப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர், தங்கள் தேவைக்கு ஏற்ப மொழிப் பாடங்களை தேர்வு செய்து கொள்ள, வாய்ப்பு கிடைக்கிறது. உலகம் முழுதும், கல்வி முறைகள் இப்படி தான் செயல்படுகின்றன.
அங்கு, பாடங்களை தேர்வு செய்யும் சுமையை, பள்ளிகள் ஏற்றுக் கொள்கின்றன. பாடங்களை நடத்துவதற்கான ஆசிரியர்களை, பள்ளிக்கூடங்கள் இணைந்து, தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் முறை பின்பற்றப்படுகின்றன. பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள், மதிப்பீடு சேவைகள், விளையாட்டு மற்றும் இசை பயிற்சி உள்ளிட்டவற்றுக்கு, ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புதிய நிறுவனங்கள், தேர்ந்த ஆட்களை வெளியில் இருந்து அளிக்கின்றன.
எனவே, வெளியில் இருந்து ஆட்களை அமர்த்திக் கொள்ளும் முறை, நல்ல பலனை அளிக்கிறது. நம் விமர்சகர்கள், இதையெல்லாம் குறிப்பிடவில்லை. நம் கல்வித் துறையும், புதிய சிந்தனைகளில் பின்தங்கி, பழைய முறைகளையே பின்பற்றி வருகிறது.
இது குறித்து, திட்டமிடுபவர்களும், நிர்வாகத்தில் உள்ளவர்களும், சுலபமாக வேலை பார்த்தே பழகிவிட்டதும் ஒரு காரணம். மாணவனின் தேவையும், பள்ளி அவனுக்கு அளிக்கும் கல்வியும், எந்த இடத்தில் பொருந்திப் போகின்றன?
சந்தை தான், மாணவனுக்கு தேவையான கல்வியை தேர்வு செய்கிறது. அதை சரியாக கவனித்து, மாணவனுக்கு அளிப்பதே, பள்ளியின் கடமை. இந்த இடத்தில் தான், முந்தைய கல்வித் திட்டம் மாறுபடுகிறது. முந்தைய கல்வித் திட்டத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட அனைத்துமே, நிலையானதொரு பட்டியலை தான், மாணவன் முன் வைத்தன. இன்றோ, மாணவனை தேர்வு செய்து கொள்ள, ஏராளமான படிப்புகள் அவன் முன் வைக்கப்பட்டுள்ளன.
எனவே, தேர்வு செய்வதில் தான், மாணவனுக்கு பிரச்னை ஏற்படும்.சந்தையில் மதிப்பு கொண்ட சில படிப்புகள் ஆதிக்கம் செலுத்தவும், சில கலைப் படிப்புகள் நிராகரிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், மாணவன் விரும்பி தேர்ந்தெடுக்க, அவன் முன், ஏராளமானவை குவிந்து கிடக்கும். ஏதாவது ஒரு கலைப் படிப்பை, ஒரு கட்டத்தில் கட்டாயமாக படிக்க, புதிய திட்டத்தில் பரிந்துரைத்து இருக்கலாம்.
மனசாட்சியை கேளுங்கள்
சிறந்த தலைவர் என்பவர், மக்கள் எண்ணத்தை கேட்டு, அதை சற்று மாற்றக் கூடிய வல்லமை படைத்தவராகவும் இருக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், இது போன்ற மும்மொழி கொள்கை எதிர்ப்புகளுக்கு செவி சாய்த்திருக்க மாட்டார்.
நாம், 1968ல் இருந்து நகர்ந்து, 2020க்கு வந்துவிட்டோம். அடுத்த கல்விக் கொள்கை எப்போது நிகழும் என்பது தெரியாது. எனவே, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள் அல்லது சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளிடம் கேட்டால், அவர்கள் கூறுவர்.
அரசியல் தலைவர்கள், தங்களை பெற்றோர் என்ற ஸ்தானத்தில் வைத்து, குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சிந்திக்க வேண்டும்.