பிரிவினை நினைவு தினம்

பாரதம் சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை நாம் கொண்டாடும் நிலையில், பாரதம் பாகிஸ்தான் பிரிவினையை, அதன் வலியை, அப்போது நடந்த கொடூரங்களை நாம் மறக்க முடியாது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு அது குறித்து அதிகம் தெரியாது. ஆனால், அதனை அவர்களுக்கு தெரியவைக்க வேண்டியது மூத்தவர்களின் கடமை. இதனை மக்கள் அறியும் விதமாக, பிரதமர் மோடி, ஆகஸ்ட் 14 பிரிவினை நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது டுவிட்டர் பதிவில், ‘ பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது. லட்சக்கணக்கான எங்கள் சகோதரிகள், சகோதரர்கள் இடம் பெயர்ந்தனர். இரக்கமற்ற வெறுப்பு, வன்முறையால் பலர் தங்கள் வாழ்க்கையை இழந்தனர். நமது மக்களின் போராட்டங்கள், அவர்களின் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14ம் தேதி, பிரிவினை நினைவு தினமாக அனுசரிக்கப்படும். சமூகப் பிளவுகள், ஒற்றுமையின்மை என்ற விஷங்களை அகற்றி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரிவினை நினைவு தினம் நமக்கு நினைவூட்டட்டும்’ என தெரிவித்துள்ளார்.