ஊரடங்கு காரணமாக தேநீர் கடைகள் உள்பட சிறிய கடைகள் கூட திறக்கப்படவில்லை. இருப்பினும், பால் விநியோகம் நடைபெற்றது. கடைகள் மூடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதால் மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கி வைத்து கொண்டனர்.
அதனால் அவர்களுக்கு சிரமம் ஏற்படவில்லை. தமிழகம் முழுவதும் பொழுதுபோக்கு தலங்களும் மூடப்பட்டன. பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள் மற்றும் லாரிகள், கால் டாக்சிகளும் ஓடவில்லை.
இதனால் வழக்கமாக பரபரப்பாகவும் நெரிசல் மிகுதியாகவும் காணப்படும் சென்னை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கண்ணுக்கு எட்டியவரை காவல் துறை வாகனங்கள் மட்டுமே சாலைகளில் சென்று வந்தன. ஊரடங்கை மீறி நகரின் சில இடங்களில் சுற்றித் திரிந்த இளைஞர்களுக்கு போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ஒருசில இடங்களில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகள் வழக்கம் போல திறந்திருந்தன. மருந்தகங்கள் திறந்திருப்பதை அடையாளம் காண முன்புறத்தில் பச்சை நிற மின்விளக்கு எரியவிடப்பட்டிருந்தது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பயணிகள் கூட்டம் அலைமோதும் கோயம்பேடு பேருந்து நிலையம், பேருந்துகளே இல்லாமல் வெறிச்சோடியது.
மெரீனா, பெசன்ட்நகர், திருவான்மியூர் உள்பட அனைத்து கடற்கரைகள் அடைக்கப்பட்டன. மெரீனா கடற்கரை, பாரிமுனை, பூக்கடை, தியாகராயநகர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் ஆள் அரவமின்றி காணப்பட்டன.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை மிகக் குறைவாக இருந்தது. சென்னை முழுவதும் உள்ள 200 அம்மா உணவகங்களிலும் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது. ஆவின் பாலகங்கள், பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன.
திருச்சி-மதுரை-கோவையில்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் ஆகியவை பேருந்துகளும், பொதுமக்களும் இல்லாமல் காலியாக காணப்பட்டது.


