பிணந்தின்னி அரசியல்!

மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை என்பதால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் அனிதாவின்  மரணம் துரதிருஷ்டவசமானது.

எங்காவது ஏதாவது ஒரு பிணம் விழாதா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்கள் போல அனிதா மரணத்தை வைத்து அரசியல் லாபம் பார்க்க சில சக்திகள் முயற்சிக்கத் தொடங்கிவிட்டன. அனிதாவை மோடி அரசு கொன்றுவிட்டது என்று கூச்சல் கிளம்பியது. தமிழகத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் அதைப் பிரதமர் மோடிக்கு எதிராக திருப்புவதையே தொழிலாகச் செய்பவர்கள் வீதிக்கு வந்தார்கள்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த அனிதாவை உச்ச நீதிமன்றம் வரை அழைத்துச் சென்றவர்கள் யார் யார்? தீர்ப்பு பாதகமாக வந்தது என்ற உடனேயே அவர்கள் அனிதாவிற்கு மன தைரியம் கொடுக்காதது ஏன்? அனிதாவின் மரணம் பற்றி மத்திய புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் கல்வித் தரம் குறைந்ததற்கு காரணம் திமுக கொண்டுவந்த ‘சமச்சீர்’ கல்வி திட்டம் தானே? உ.பி, பிகார் மாணவர்களை விட தமிழக மாணவர்கள் என்ன தரம் குறைந்தவர்களா?

அனிதாவின் மரணத்திற்கு நீட் தேர்வை எதிர்த்தவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். 1176 மார்க் (96 சதவீதம்) எடுத்த அனிதா நினைத்திருந்தால், தயாரிப்பு செய்திருந்தால் நிச்சயம் நீட் தேர்விலே வெற்றி பெற்றிருப்பாள்.

அடேயப்பா… தொலைக்காட்சி விவாதங்களில் கூட தேர்வுக்கு எதிராக என்ன ஒரு கூக்குரல்! இதே தொலைக்காட்சி உரிமையாளர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் லட்சம் லட்சமாய் நன்கொடை வாங்கி கொள்ளை அடித்து வந்ததற்கு நீட் தேர்வு மரண அடியாய் விழுந்தது என்பது உண்மை தானே? ஸ்டாலின் குதிக்கிறார், அவர் நண்பர் ஜெகத்ரட்சகன் நடத்தும் மருத்துவ கல்லூரியில் வாங்கும் நன்கொடை பற்றி வாய் திறக்கத் தயாரா?

மொத்தத்தில் இன்று நீலிக் கண்ணீர் வடிப்பவர்கள்தான் அனிதாவின் மரணத்திற்குக் காரணம். அனிதாவின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திப்போம்.