நான் குஜராத் வடோதரா நகரில் 1988ல் பிரசாரக்காக இருந்தேன். அப்போது குஜராத்தின் ஒரு பகுதி கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது. வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகிப்பதற்காக சங்க காரியாலயத்தில் ’சுக்டி’ என்ற ஊட்டச்சத்து மிக்க உணவுப் பண்டம் சேகரிக்கப்பட்டு வந்தது. ஒரு நாள் பிச்சை எடுப்பவர் போல தோற்றமளித்த ஒரு மூதாட்டி காரியாலயத்துக்கு வந்தார். என்ன விஷயம் என்று கேட்டபோது ’சுக்டி’ என்று பதிலளித்தார். அங்கிருந்த ஊழியர்கள், வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகிப்பதற்காக தான் சுக்டி, உள்ளூரில் விநியோகிப்பதற்கு அல்ல என்று சொன்னார்கள். வந்திருந்த மூதாட்டி,”குழந்தாய், நான் உன்னிடம் இருந்து சுக்டி வாங்கிக் கொள்வதற்காக இங்கே வரவில்லை. கொஞ்சம் சுக்டி கொண்டு வந்திருக்கிறேன். அதைக் கொடுத்துவிட்டு போகத்தான் வந்தேன்” என்றார். இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களின் நல்ல செய்கைகளால் தான் தர்மம் நிலை பெறுகிறது, வலுப்பெறுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் நகரில் மத்திய அரசு உதவியுடன் ஆர்எஸ்எஸின் ஊக்கம் பெற்ற சக்ஷம் என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தொண்டு அமைப்பு ஒரு முகாம் நடத்தியது. மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு ஏராளமான மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி வழங்கப்பட்டது. இதற்காக நிறைய மாற்றுத்திறனாளிகள் பல ஊர்களிலிருந்தும் பஸ் நிலையம் வந்திறங்கி முகாம் நடக்கும் இடத்திற்கு வந்தார்கள். அப்படிப்பட்ட மாற்றுத்திறனாளிகளில் ஒருவரை முகாமிற்கு அழைத்துச் சென்ற ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்தார். நாள் முழுவதும் அங்கேயே மாற்றுத்திறனாளிகளுக்காக முகாம் நடக்கிறது என்று அறிந்து கொண்ட அவர் அன்றைய தினம் தான் சம்பாதிப்பதை கைவிட்டுவிட்டு பஸ் நிலையத்திலிருந்து முகாம் இடத்திற்கு இலவசமாகவே மாற்றுத்திறனாளிகளை அழைத்து வந்து கொண்டிருந்தார்.
முகாம் நடக்கும் இடத்திற்கு எதிரே ஒரு புகைப்பட ஸ்டுடியோ. முகாமில் உதவி பெற வந்த அன்பர்கள் சிரமப்பட்டு அங்கே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்ப வேண்டியிருந்தது. பார்த்தார் புகைப்பட ஸ்டுடியோக்காரர். அன்றைய தினம் தன்னுடைய ஸ்டுடியோவையே முகாம் இடத்திற்கு மாற்றி நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன் பங்கு சேவையாக இலவசமாக புகைப்படம் எடுத்துக் கொடுத்தார். இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களால் தான் தேசத்தில் தர்மம் வாழ்கிறது.