பாரதிதாசனாய் கனிந்த கனகசுப்புரத்தினம் சங்கம நாட்டம் எங்கும் உண்டு

தனது மாநிலக் கட்சியை (உத்கல சம்மிலனி) கலைத்து, சுதந்திரப் பேரியக்கத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு, அதன் மூலம் மாநில நலனில் தனக்கு உள்ள ஆர்வத்தை தேசிய பிரதான பிரவாகத்தில் சங்கமிக்கச் செய்து தன் உள்ளத்தின் அடியாழத்தில் இருந்த தேசிய உணர்வை நாடறிய செய்தவர்  ஒரிசா தந்த சுதந்திரப் போராட்ட வீரர் உத்கல மணி கோபபந்து தாஸ். பிரதான தேசிய பிரவாகத்தை நாடும் இந்தப் போக்கு தமிழகத்தில் மற்ற எல்லோரையும் விட புரட்சி கவிஞர் பாரதிதாசன் உள்ளத்தில் கோயில் கொண்டிருந்தது என்பது சுவாரசியமான தகவல்.  இதற்கான அத்தாட்சிகளாக அவர் வாழ்விலேயே நடந்த சில காட்சிகளையும் அவர் வாய்மொழியாக, கவிதைகள் வாயிலாக அளித்துள்ள சான்றுகளையும் இங்கே வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். தமிழகம் தேசியத்தை நோக்கி யாத்திரை மேற்கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் இது எல்லா தரப்பினரையும் சிந்திக்கத் தூண்டும் என்று கருதுகிறோம்.

 

பாண்டிச்சேரியில் வேணு நாயக்கர் வீட்டு திருமணம். கனக சுப்புரத்தினம் என்ற இளைஞர் கம்பீரமான குரலில் சங்கீத நயத்துடன் “வீர சுதந்திரம் வேண்டிநின்றார் பின்பு வேறொன்று கொள்வாரோ” என்ற பாரதியாரின் நாட்டுப்பற்று ஓங்கும் பாடலை  உணர்ச்சிகரமாகபாடினார்.  அந்த திருமணத்திற்கு பாரதியார் வந்திருப்பது அவருக்கு தெரியாது. வேணு நாயக்கர் தான் அறிமுகம் செய்து வைத்தார். “நீங்கள் என் பாட்டை உணர்ந்து பாடுகிறீர்கள்” என்ற பாரதியாரின் பாராட்டு பின்னாளைய பாரதிதாசனுக்கு கிடைத்தது.

“எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா” என்ற பாடல் “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது” என்னும் குறிப்புடன் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகைக்கு அனுப்பப்பட்டு பிரசுரமானது. உயர்ந்த லட்சியத்தில் ஈடுபடுகிறவருக்கு தெய்வ சக்தி துணை நிற்கும் என்ற கருத்தை நம்பிக்கையூட்டும் விதத்தில் பேசியது பாரதிதாசனின் அந்தக் கவிதை.

பாரதி, பாரதிதாசன் இருவரும் பெண் உரிமை பேசிய பெரும் கவிஞர்கள்.

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவதில்லையாம்”

என்று பாரதி பாடினார் என்றால்

“ஆடை அணிகலன், ஆசைக்கு வாசமலர்

தேடுவதும் ஆடவர்க்கு சேவித்து இருப்பதுவும்

அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப் போல் வாழுவதும்

கெஞ்சுவது மாகக் கிடக்கும் மகளிர் குலம்

மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி”

என்று முழக்கினார் பாரதிதாசன். எனவேதான் “பாரதிதாசனாருடன் பழகுவதன் மூலம் பாரதியை பார்க்கவில்லையே, அவருடன் பழகவில்லையே என்ற குறை எனக்கு நிவர்த்தி ஆயிற்று” என்பார் கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி.

“சிறந்ததை மிக மிக விரும்பி போற்றுதலும் தீயதை மிக மிக வெறுத்து தூற்றுதலும் அவர் இயல்பு. இந்த நாட்டில் புகுந்து சமுதாயத்தில் இடம்பெற்று விட்ட தீய பழக்க வழக்கங்களையும் மூடக் கருத்துக்களையும் கடிந்து பாடி, படிப்பவர் உள்ளத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்திய புரட்சியாளர் அவர்” என்று கூறி புரட்சிக் கவிஞர் என்ற அவர் புகழ் பொருத்தமானதுதான் என்பார் மு.வரதராசனார்.

(டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் எழுதிய பாரதியும் பாரதிதாசனும் என்ற நூலிலிருந்து)

 

பாரதிதாசன் என்று ஏன் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என விணவிய ஒருவரிடம் ஆவேசத்துடன் பதில் அளித்தார் பாரதிதாசன்:

“உங்கள் வினாவின் நோக்கம் எனக்கு புரிகிறது. இந்த குறும்புத்தனமான வினா,”ஐயருக்கு நீங்கள் அடிமையா?” என்று கேட்பது போலத்தான். நான் என்றென்றும் உளமார போற்றி வழிபட்டு வருகிற தெய்வம் இந்த ‘ஐயர்’.  பாரதியார் அன்பும் பண்பும் தமிழுணர்ச்சியும் ஒருங்கு சேர்ந்த பொன் உருவம்.  பாரதியார்க்கு நான் தாசனாக இருப்பதில் உங்களுக்கென்ன ஆட்சேபணை? இந்த வினா யார் விடுத்தாலும் எனக்கு கோபம் வரும். ஏனெனில் கழகத்தவர்களோ முன்னேற்றம் காணத் துடித்தவர்களோ யாராயிருந்தாலும் சரி ‘சீர்திருத்தம்’ என்னும் சொல்லை எழுத்துக் கூட்டிப் படிக்க கற்றுக்கொள்ளத் தெரிந்து கொள்வதற்கு பல நாள் முன்னதாகவே தமது வாழ்க்கையில் சீர்திருத்த செயல்கள் பலவற்றை செய்து காட்டியவர் பாரதியார்.  ஐயரோடு புதுச்சேரியிலே 10 ஆண்டுகளுக்கு ஒட்டிப் பழகியதுடன் அவரைக் கட்டிக் காத்த பணியும் செய்தவன் நான். அவரது சீரிய இயல்புகளையும் பரந்த மனப்பாங்கையும், சிறுமை கண்டு சாடும் தன்மையையும் கண்கூடாக பார்த்து மகிழ்ந்து வியந்தவன். அவர் தமிழ் மொழியை தன்மூச்சாகக் கொண்டு உலவியவர். பிற மாதர்களை கண்ணெடுத்தும் பாராததோடு அவர்களையெல்லாம் தெய்வங்களாக வழிபட்டவர் ஐயர். ஆண்மை தவறாத புண்ணிய சீலர். அடடா! ஐயர் பாடினால் உடல் சிலிர்க்கும், உள்ளம் கிளர்ச்சி பெறும். பாரதியாரது பாடல்களை அவரே பாடக் கேட்டிருப்பவர்கள் பெரும் பாக்கியவான்கள், நிரம்ப கொடுத்து வைத்தவர்கள்.”

டெல்லி தமிழ் சங்கத்தின் ‘சுடர்’ என்ற ஆண்டு மலரில் (1966) ஸ்ரீ வி.ஜி சீனிவாசன் எழுதிய பேட்டி கட்டுரையிலிருந்து…

தியாகபூமி (16-−4-−1976)