பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இலங்கை சென்றார். வழக்கம் போல், திராவிட இயக்கங்கள், தமிழக மீனவர்கள் பிரச்சினை, கச்சத்தீவு விவகாரங்கள் பேசி தீர்க்க வேண்டும் என வலியுறுத்தின. ஆனாலும் சில முக்கியமான பிரச்சினைகளில் பேச்சு வார்த்தை நடத்தியது மட்டுமில்லாமல், தீர்வு காண வழி காணப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது 7 முக்கிய அம்சங்களுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பாதுகாப்பு, எரிசக்தி, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் வர்த்தகதுறைகளில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
இருநாடுகளிடையே போடப்பட்ட ஒப்பந்தங்களில் முக்கியமான ஒப்பந்தம் ராணுவ ஒப்பந்தமாகும்.
40 ஆண்டுகளுக்கு பின்னர் போடப்பட்ட ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் கடந்த 70 ஆண்டுகளாக எந்த நாட்டுடனும் இது போன்ற பாதுகாப்பு ஓப்பந்தம் கையெழுதிடவில்லை. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அதாவது 2014-ல் கொழும்பில் உள்ள பிரதான துறைமுகத்திற்கு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆராய்ச்சி கப்பல்கள் வந்ததற்கு பாரதம் ஆட்சேபனை தெரிவித்திருந்தது.
அன்றிலிருந்து, 2014 முதல் இலங்கை சீன நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்த இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.
இலங்கை தனது நட்பு நாடான சீனாவுடனான உறவுகளை சமநிலைப்படுத்தும் வேளையில், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உறவுகளை விரிவுபடுத்துவதற்காக இலங்கையுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்பந்தங்கள் போட்டுள்ளார்.
பாரதத்தின் பாதுகாப்பு நலன்களுக்கு விரோதமான எந்த வகையிலும் இலங்கை தனது பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதிக்காது என்று பிரதமர் மோடியிடம் உறுதியளித்ததாக இலங்கை அதிபர் திசாநாயக்க தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கும் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாகத்கவுக்கும் இடையிலான பேச்சுவார்தையின் போது மீனவர் பிரச்சினைகள் பற்றி குறிப்பிடப்பட்டது. இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் தொடர வேண்டும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம் என்று பிரதமர் மோடி ஜனாதிபதி திசாநாயக்கவை சந்தித்த பின்னர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
இதையடுத்து, ஒரு நாளுக்குப் பிறகு ஏப்ரல் 6-ந் தேதி, சிறப்பு நடவடிக்கையாக குறைந்தது 11 பாரதிய மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தது. மோடியின் இலங்கை பயணத்தில், பாரதிய மீனவர்களின் நலன்களை விட்டுக் கொடுக்கவில்லை என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்துக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.