வங்காளத்தில் 1985ம் ஆண்டு கடுமையான பஞ்சம். மக்கள் பசியால் உண்ண உணவின்றி தவித்தனர். அச்சமயம் பர்த்துவான் என்ற ஊரில், பசியால் வாடி மெலிந்து இளைத்துப்போன ஒரு சிறுவன் செல்வந்தர் ஒருவரிடம் உதவியாக ஒரு பைசா கேட்டான்.
அந்த செல்வந்தர் அவனிடம் ”உனக்கு நான்கு பைசா தருகிறேன். அதை கொண்டு நீ என்ன செய்வாய்?” என்று கேட்டார். ”இரண்டு பைசாவுக்கு ஏதாவது உணவுப் பொருள் வாங்குவேன். மீதி இரண்டு பைசாவை என் அம்மாவிடம் கொடுப்பேன்” என்றான். ”இரண்டு அணா கொடுத்தால் என்ன செய்வாய்?” என்று செல்வந்தர் மீண்டும் கேட்டார்.
இவர் தம்மிடம் விளையாடுகிறார் என நினைத்து சிறுவன் பேசாமல் நகர்ந்தான். அந்த செல்வந்தர் சிறுவனின் கையை பிடித்துக்கொண்டு ‘பதில் சொல்’ என்றார். சிறுவன், ”நான்கு பைசாவுக்கு அரிசி அல்லது வேறு பொருள் வாங்குவேன். மீதியை என் அம்மாவிடம் தருவேன்” என்றான் தெளிவான குரலில். ”நான்கு அணா கொடுத்தால்”, ”இரண்டு அணாவை கொண்டு இரண்டு நாள் உணவுக்கு ஏற்பாடு செய்வேன். மீதி இரண்டு அணாவுக்கு மாம்பழம் வாங்கி நான்கு அணாவுக்கு விற்பேன். அதன் மூலம் நானும் என் தாயாரும் வாழ்க்கை நடத்துவோம்” என்றான்.
செல்வந்தர் அவனுக்கு ஒரு ரூபாய் (நூறு பைசா) கொடுத்ததும், சந்தோஷத்துடன் அங்கிருந்து ஓடினான். இரண்டாண்டுகளுக்குப் பிறகு அந்த செல்வந்தர் பர்த்துவான் சென்றபோது ஒரு இளைஞன் தனது கடையிலிருந்து இறங்கி வந்து அவரை வணங்கினான். ”ஐயா, தாங்கள் எனது கடைக்கு வரவேண்டும்” என அழைத்தான்.
”நீ யாரென்று எனக்குத் தெரியவில்லையே” என்று அந்த செல்வந்தர் கேட்டபோது, இளைஞனின் கண்களில் நீர் பெருகியது. இரண்டாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தினான். இப்போது அந்தக் கடை வருமானத்தின் மூலம் அவன் நல்ல வாழ்க்கை நடத்தி வந்தான். செல்வந்தரும் அவனை ஆசிர்வதித்தார்.
அந்த செல்வந்தரே வங்காளத்தில் பிரபல கல்வியாளரும் சமூக சேவகருமான ஈஸ்வர் சந்திர வித்யாசகார்.