சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த போராட்டங்களை பாக்., ஆதரவாளர்கள் துாண்டி விட்டுள்ளது தெரியவந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் வாஷிங்டனில், சமீபத்தில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டம் குறித்து, அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைப்பின் முக்கிய நிர்வாகியான அடாபா பிரசாத் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. போராட்டத்தின்போது, பாக்.,குக்கு ஆதரவான பேனர்களை சிலர் வைத்திருந்தனர். எதிர்த்து கேட்ட பின், அவை நீக்கப்பட்டன. விசாரணை நடத்தியபோதுதான், இந்த பேரணிக்கு, அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர்களான தரக் ஷன் ராஜா, குடாய் தன்வீர் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்தும், இவர்கள் போராட்டங்களை தூண்டி விட்டதும் தெரியவந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்களில் ஊடுருவி, இவர்களைப் போன்ற பாக்., ஆதரவாளர்கள், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அதேபோல், காலிஸ்தான் ஆதரவாளர்களும், போராட்டங்களை தூண்டி விட்டு வருகின்றனர். உலக பார்வையில், இந்தியாவுக்கு எதிராகவும், இந்திய முஸ்லிம்கள் குறித்து தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும், பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியே, இது போன்று போராட்டங்களை தூண்டிவிடுவது. இவ்வாறு, அவர் கூறினார்.