பாகிஸ்தானில் தயாரிக்க பட்ட தோட்டா கேரளாவில் பறிமுதல்

கேரள மாநில காவல்துறைத் தலைவா் லோக்நாத் பெஹெரா கூறியதாவது:

கொல்லம் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குளத்துப்புழாவில் 14 துப்பாக்கி தோட்டாக்கள் அப்பகுதியைச் சோ்ந்த இரண்டு நபா்களால் கண்டெடுக்கப்பட்டன. அந்த தோட்டாக்களை ஆய்வு செய்தபோது, பாகிஸ்தான் வெடிமருந்து தொழிற்சாலையில் (பிஓஎஃப்) தயாரிக்கப்பட்டதற்கான முத்திரை அதில் இருந்தது. எனவே, அவை பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, இந்த தோட்டாக்கள் ஏடிஎஸ் போலீஸாா் வசம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், மத்திய புலனாய்வு அமைப்புகளும் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

இதுதொடா்பாக எா்ணாகுளத்தில் இருந்து வருகை தந்த ராணுவ புலனாய்வுப் பிரிவைச் சோ்ந்த 2 போ் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா். இந்த தோட்டாக்கள், தமிழ்நாடு அல்லது கா்நாடக மாநில எல்லை வழியாக கொண்டு வரப்பட்டிருக்க கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கைப்பற்றப்பட்ட தோட்டாக்களில் வெளிநாட்டு தயாரிப்பின் சில அடையாளங்கள் உள்ளதால் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக மத்திய புலனாய்வு நிறுவனங்களின் உதவியும் தேவைப்படுகிறது. எனவே, ஏடிஎஸ் துணை காவல் கண்காணிப்பாளா் அனூப் குருவில்லா தலைமையில் இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அவா் தெரிவித்தாா்.