அரசு பஸ்சில் படியில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவன், நேற்று தவறி விழுந்ததில் கால்கள் நசுங்கின. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்ததும், இந்த பள்ளி மாணவர்கள் சிலர், ஆபத்தான முறையில் அரசு பஸ்சின் படிக்கட்டில் நின்றும், தொங்கியபடியும் பயணம் மேற்கொண்டனர்.
இந்த பஸ் குன்றத்துார் தேரடி பகுதியை கடந்த போது, முன்படிக்கட்டில் பயணித்த அரசு பள்ளி மாணவன் ஒருவன் தவறி விழுந்தான். அப்போது, பஸ்சில் சக்கரம் ஏறி இறங்கியதில், அந்த மாணவனின் இரு கால்களும் நசுங்கின. தகவலறிந்து வந்த குன்றத்துார் போலீசார், மாணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 3ம் தேதி, குன்றத்துார் அருகே கெருகம்பாக்கத்தில் அரசு பஸ் படிக்கட்டில் நின்று, ஆபத்தான பயணம் செய்த மாணவர்களை, நடிகையும், பா.ஜ., பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கண்டித்து, அடித்து இறக்கினார். அவர் கண்டித்த அதே இடத்தில் தற்போது, பள்ளி மாணவன் விழுந்து கால்கள் நசுங்கியதால், ரஞ்சனா நாச்சியாரின் செயலுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளது.
கடலுார் : கடலுார் அருகே, ஓடும் பஸ்சின் பின்பக்க ரப்பர் பீடிங் சேதமடைந்ததால், கண்ணாடி கீழே விழாமல் இருக்க கயிறு மூலம் டிரைவர், கண்டக்டர் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலுாரில் இருந்து பண்ருட்டிக்கு நேற்று காலை டிஎன் 32 என் 3210 பதிவெண் கொண்ட (தடம் எண் 17) அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. கடலுார் அடுத்த வெள்ள கேட் பஸ் நிறுத்தம் அருகே காலை 9:15 மணியளவில் சென்றபோது, பஸ்சின் பின்புறம் உள்ள கண்ணாடியின் ரப்பர் பீடிங் சேதமடைந்தது. இதனால், கண்ணாடி கீழே விழும் நிலை ஏற்பட்டது. சுதாரித்து கொண்ட டிரைவர், பஸ்சை சாலையோரமாக நிறுத்தினார்.
பின், பஸ்சில் பயணம் செய்த பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பினர். இதையடுத்து, டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் கண்ணாடி கீழே விழாமல் இருப்பதற்காக, கயிறு மூலம் கட்டினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.