நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு மாலை நேரத்தில், மாநில அரசு பஸ் இயக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை அந்த பஸ்சில், பந்தலுார் அருகே காபிகாடு பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவி பயணித்தார். மாலை 6:30 மணிக்கு, தான் இறங்க வேண்டிய பகுதியில் பஸ்சை நிறுத்துமாறு கூறினார். அப்போது, பஸ் நடத்துனர் பாபு என்பவர், ‘இது எக்ஸ்பிரஸ் பஸ்; கண்ட இடங்களில் பயணிகளை இறக்கி விட்டால், நாங்கள் எப்படி செல்ல முடியும்’ என, பேசி உள்ளார்.
பஸ்சில் இருந்த சில பயணியர் நடத்தினரிடம் வாக்குவாதம் செய்ததால், காபிகாடு பகுதியில் இருந்து, 1 கி.மீ.,யில் யானைகள் நடமாடும் பகுதியில் மாணவியை இறக்கிவிட்டு சென்றார். இந்த, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது. தொடர்ந்து, நீலகிரி போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜ் விசாரணை செய்து, நடத்துனர் பாபுவை நேற்று, ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார்.