புதுக்கோட்டை அருகே, கைக்குறிச்சியில் பரம்பரை சொத்துக்களை விற்று, 40 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் விவசாயி தமிழ்செல்வன், 56, அனைத்து ஜல்லிக்கட்டுகளில் பரிசுகளை வாரி குவிக்கிறார். ஜல்லிக்கட்டு மீது கொண்ட ஆர்வம் காரணமாக, 30 ஆண்டுக்கும் மேலாக காளைகளை வளர்த்து, போட்டியில் பங்கேற்க செய்து வருகிறார்.
தனக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தில், 40 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறார். தவிர, ஆடு, மாடு, வான்கோழி, வாத்து, பந்தய புறா, சண்டைக்கோழி, முயல், நாய், குதிரை போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவரது காளைகளுக்கு புல்லட், கரிகாலன், காரி, டான்ஸிங் வொயிட், சாமி என பெயரிட்டு நேர்த்தியாக போட்டிக்கு தயார் செய்கிறார். தச்சங்குறிச்சியில், நேற்று முன்தினம் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், இவரது சாமி என்ற காளை, முதல் பரிசாக பல்சர் பைக் வென்றது. காளை வளர்ப்பு குறித்து தமிழ்செல்வன் கூறியதாவது:
தமிழகத்தின் பெரும்பாலான ஜல்லிக்கட்டு போட்டியில், என் காளைகள் பங்கேற்கும். பரிசு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் களத்தில் காளைகள் இருக்க வேண்டும் என்பது என் நோக்கம். காளைகளுக்கு பருத்திக் கொட்டை, பிண்ணாக்கு, பேரிச்சம் பழம், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு குருணையுடன், கருக்காய் தவிடு, கொண்டை கடலை போன்ற சத்தான உணவுகளை கலந்து காலை, மாலை என, இரு வேளை வழங்குகிறோம். காளைகளுக்கு, மின்விசிறியுடன் கூடிய நான்கு தனி கொட்டகை அமைத்து, பராமரிக்கிறேன்.
காளைகள் உணவுக்கு மட்டும், மாதம், 4 லட்சம் ரூபாய் செலவாகிறது. மாதம், 20,000 ரூபாய் சம்பளத்தில், மூன்று ஊழியர்களை வைத்து, அனைத்து காளைகளும் பராமரிக்கப்படுகின்றன. காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சி, பாய்ச்சல் பயிற்சி என, பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. என் காளைகளுக்கு மட்டும் மாதம், 5 லட்சம் ரூபாய் செலவாகிறது.
விவசாயத்தில் வரும் வருமானம், பரம்பரை சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து, அந்த பணத்தில் தான் காளைகளுக்கு செலவு செய்கிறேன். தற்போது, என்னிடம் வீடு மட்டுமே உள்ளது. குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர். காளைகள் பரிசாக பெறும் சைக்கிள்களை, ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறேன். தற்போது, 10க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் என்னிடம் உள்ளன. இதையும் மாணவர்களுக்கு வழங்க உள்ளேன்.
கடந்த 2021ல், விராலிமலை ஜல்லிக்கட்டில், முதல் பரிசாக புல்லட் வென்றோம். அதே புல்லட் காளை, 2022ல் அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் களமிறங்கி, நீண்ட நேரம் களத்தில் நின்று வீரர்களிடம் பிடிபடாமல் சிறந்த காளையாக தேர்வாகி, முதல்வரின் சிறப்பு பரிசான, 10 லட்சம் ரூபாய் மதிப்பு காரை வென்றது. கடந்த ஆண்டு, திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டில் கரிகாலன் என்ற காளை பைக் பரிசு பெற்றது. தற்போது தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் சாமி என்ற காளை முதல் பரிசாக பைக் வென்றது.
போட்டியில் நன்றாக விளையாடும் காளைகளுக்கு, மூன்று மடங்கு பணம் தருவதாக, அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உட்பட சிலர் விலைக்கு கேட்கின்றனர். ஆனால், நான் வளர்க்கும் எந்த காளையையும் விற்பனை செய்ய மாட்டேன். கடைசி மூச்சு இருக்கும் வரை காளைகளை போட்டிகளில் பங்கேற்க செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்