ஹைதரதாபாத் நகரில் 2013 பிப்ரவரி 21 அன்று இரவு 7 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 18 பேர் பலியானார்கள், 130க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு மூன்றாண்டு விசாரணைக்குப் பின் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் சூத்ரதாரியான யாசின் பட்கல் உள்ளிட்ட ஐந்து பேர்களும் குற்றவாளிகள் என மேற்படி நீதிமன்றம் அறிவித்த சில நாட்களுக்கு பின்னர், தேசிய புலனாய்வு நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்துள்ளது. ஊடகங்கள், மற்ற சிறு குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளை போலவே யாசின் பட்கல் சாதாரண குற்றவாளி போன்ற பிம்பத்தை உருவாக்க முற்படுகின்றன.
இதே தேதியில் கேரள மாநிலத்தில் இந்திய ஜனநாயக இளைஞர் சம்மேளன பிரமுகர் விஷ்ணு கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பற்றி விலாவாரியாக எழுதிய ஊடகங்கள், யாசின் பட்கல் உள்ளிட்டவர்களுக்கு ஏன் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது பற்றிய முழு விவரங்களை எழுதவில்லை. நீதிமன்றத்தில் யாசின் பட்கல் மீது தேசிய புலனாய்வு ஏஜென்ஸி சுமத்திய குற்றச்சாட்டுகளை கூட எழுத மனம் வரவில்லை. தேச பக்த இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் எழுதிய ஊடகங்கள், நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் பயங்கரவாத செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்த போக்கு கவலை அளிக்கக்கூடியது.
இது யாசின் பட்கல் நடத்திய முதல் பயங்கரவாத குண்டு வெடிப்பு என்பது போலவும் இவன் நடத்திய பல வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களை மறைக்கும் விதமாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் மூளையான இவன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதைக் கூட ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவர தயக்கம் காட்டுகின்றன.
2010ம் வருடம் பெங்களூரு மைதானத்தில் கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது, மைதானத்திற்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பு, 2012ம் வருடம் புனே நகரில் ஜெர்மன் பேக்கரியில் நடத்திய குண்டு வெடிப்பின் சூத்ரதாரி- திட்டத்தை வகுத்துக் கொடுத்தவன். 2012 ஜூலை 13 அன்று மும்பையில் ஓபராய் ஹவுஸ், ஜவேரி மார்க்கெட், மேற்கு தாதர் பஸ் நிலையம் ஆகிய மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 27 பேர் கொல்லப்பட்டார்கள், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். இந்த இரண்டு வழக்குகளிலும் முதல் குற்றவாளிகள் யாசின் பட்கல், அவனது சகோதரன் ரியாஸ் பட்கல் என்பது ஊடகங்களுக்கு தெரிந்தும் செய்தி வெளியிடவில்லை.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்திய புலனாய்வு அமைப்பினர் நடத்திய வழக்குகளிலும் இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் முதல் தீர்ப்பு வந்துள்ளது. அந்த தீர்ப்பு மரண தண்டனை விதித்துள்ளது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ள கருத்து, நீதியை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்தும், அபூர்வமான வழக்காக கருதப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்கள். தீர்ப்பின் இறுதியில் நீதிபதியின் கருத்தும் முக்கியமானது. கொலை, நாட்டின் மீது தொடுத்த யுத்தம், சதி செய்தது, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் உண்மையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை கூட ஊடகங்கள் தங்களின் வசதிக்காக மறந்து விட்டன.
திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல் யாசின் பட்கலை விடுவிக்க நடந்த பல்வேறு முயற்சிகள் பற்றி தெரிந்தால், யாசின் பட்கல் எவ்வளவு மோசமான பயங்கரவாதி என்பது புரியும். மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கும் 19 வயது மாணவன் ஆசிப் அகமது என்பவன், இஸ்லாமிக் ஸ்டேட் என்ற அமைப்பின் உதவியுடன் சிறையிலிருந்து யாசின் பட்கலை தப்பிக்க வழி வகுத்து கொடுத்த அடிப்படையில் கைது செய்யப்பட்டான். இந்த சதிக்கு உடந்தையாக இருந்த முகமது நபீஸ் என்பவனும் திட்டத்தில் பங்கு கொண்டவன். புலனாய்வுத் துறை விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டதால், யாசின் பட்கல் தப்பிக்க முடியவில்லை. ஜூன் 2015ல் யாசின் பட்கல், சிறையிலிருந்து கைப்பேசியின் மூலமாக தனது மனைவியிடம், ‘கூடிய விரைவில் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்லிருந்து சிறையில் உள்ள என்னை விடுவிக்க வருவார்கள்’ என தெரிவித்துள்ளான்.
ஊடகங்களில் வந்துள்ள செய்தியைப் போல், யாசின் பட்கல் மற்ற குற்றவாளிகளை போல் செயல்பட்டவன் இல்லை. சிமி மீது தடைவிதித்த போது, மீண்டும் பாரத தேசத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பதற்காக, 2008ல் தனது சகோதரன் ரியாஸ் பட்கல், அப்துல் சுபான் குரேஷி ஆகியோருடன் இணைந்து இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பை ஏற்படுத்தியவன். பிகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த குண்டு வெடிப்பிலும் இவனது பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. கடந்த பல ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருப்பவன் யாசின் பட்கல். இவன் யுனானி மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டு பயங்கரவாதியாக செயல்பட்ட இக்பால் இஸ்மாயில் ஷகாபந்திரி என்பவனுடன் காலத்தை கடத்தியவன். ஆகவே இவனது ரத்தத்தில் பயங்கரவாத சிந்தனை புரையோடி போயுள்ளது என்பதை மறந்துவிட்டு, யாசின் பட்கல் விடுதலைக்கு போராடுபவர்களின் பக்கம் நின்று மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என போராடும் தேச விரோதிகளுக்கு ஆதரவாக களம் காண புறப்பட்டு விடுவார்கள் ஊடகத் துறையினர்.
தேசிய புலனாய்வு அமைப்பினர் 2013ல் பிகார் மாநிலம் இந்திய நேபாள எல்லையில் இவனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளையும் வெளியிட வேண்டிய ஊடகங்கள் வெளியிடவில்லை. ஏற்கனவே, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தொடர்பில் இருந்த யாசின் பட்கல், சூரத் நகரத்தின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியவன்.
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மூலமாக 2006ல் இரண்டு மாத காலம் பயிற்சி எடுத்தவன் யாசின் பட்கல். உத்தரப் பிரதேசத்தில் அல்-காய்தாவின் பொறுப்பாளருடன் தொடர்புகொண்டு, யூதர்களை கொல்வதற்கு இருவரின் உரையாடல் மூலமாக திட்டம் தீட்டப்பட்டது நடந்தது என்பதையும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தங்களது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளார்கள். அல்-காய்தாவினர், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலை பாராட்டியுள்ளார்கள் என்ற தகவலையும் யாசின் பட்கல் புலனாய்வு அமைப்பினரிடம் தெரிவித்துள்ளான். ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் உள்ள அல்-காய்தா தலைவர்களை ரியாஸ் பட்கல் சந்தித்ததாகவும் தாக்குதலுக்கு உதவி செய்வதாகவும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு பயிற்சி அளிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் விசாரணையின் போது தெரிவித்துள்ளான்.
இந்தியாவில் தேடப்படும் இந்தியன் முஜாஹிதீன் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு பாகிஸ்தான் என்றும் குறிப்பாக ஐ.எஸ்.ஐ. அமைப்பு என்பதும் விசாரணையில் தெரிந்தது. யாசின் பட்கலுக்கு ஐ.எஸ்.ஐ. அமைப்பில் உள்ள லெப்டினட் கர்னல் பொறுப்பில் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளின் பட்டியலில் உள்ள இக்பால் பட்கல் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகவும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு நிதி கிடைக்கவும், பயிற்சி அளிக்கவும் ஐ.எஸ்.ஐ.யின் உதவியை பெற்றவன் இக்பால் பட்கல். இவன் குண்டு வெடிப்பு வழக்கின் 11வது குற்றவாளி.
மேலும், பல்வேறு தகவல்கள் இருந்த போதும், ஊடகங்கள் ஒரு தேசத் துரோக குற்றவாளி குறிப்பாக முஸ்லிம் பயங்கரவாதிகளை பற்றி குறிப்பிடும்போது மிகவும் எச்சரிக்கையாக எழுதுகிறார்கள். ஆனால் மலோகான் குண்டு வெடிப்பில் குற்றவாளியாக கருதப்படும் புரோகித் பற்றியும் சந்நியாசினியை பற்றியும் எழுதும் போது, ஊடகங்களின் பேனா முனை தட்டு தடுமாறாமல் எழுதுகின்றன.
இதுதான் ஊடகங்களின் தர்மம் என்பது போல் சித்தரிக்கிறார்கள். இந்த ஊடகங்கள் கூடிய விரைவில் யாசின் பட்கலை தியாகியாக சித்தரிக்கும் செயலும் நடைபெறும். இதற்காகவே நேரு பல்கலைகழகத்தில் கன்னையா குமார்களை உருவாக்கும் காரியத்தில் ஈடுபடும் இடதுசாரி மாணவர் இயக்கத்திற்கு கொடி பிடிக்க கூட இந்த ஊடகங்கள் தயக்கம் காட்டாது. இம் மாதிரியாக ஊடக (அ)தர்மத்தை செய்ய பல ராம்கள் தலையெடுக்கக்கூடும்.