பயங்கரவாதத்தில் விடுபடும் இளைஞர்கள் – கட்டுப்பாடுகளால் காஷ்மீரில் மாற்றம்

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து, பயங்கரவாத அமைப்புகளில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்துள்ளது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370வது சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அரசு அறிவித்தது.அதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும், பயங்கரவாத அமைப்புகளில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அந்த ஆய்வை மேற்கொண்ட பாதுகாப்பு முகமைகள், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடந்த, 2019ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல், பயங்கரவாத அமைப்புகளில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. சராசரியாக, ஐந்து இளைஞர்கள், பயங்கரவாத குழுக்களில் தற்போது இணைகின்றனர். ஆனால், ஆகஸ்ட் மாதத்திற்கு முன், ஒவ்வொரு மாதமும், சராசரியாக, 14 இளைஞர்கள், பயங்கரவாத அமைப்புகளில் இணைந்தனர்.

பொதுவாக, பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடங்களில், ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி, பயங்கரவாத அமைப்புகளில், ஆள் சேர்க்கும் பணிகளில் ஈடுபடுவர்.ஆனால், இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், இறுதிச் சடங்குகளில், நெருங்கிய உறவினர்கள், 10-15 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். ஆகையால், அங்கு, இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளில் இணைக்க வழியில்லாமல் போனது.

இதேபோல், பாதுகாப்புப் படையினரிடம் சிக்கிக்கொள்ளும் பயங்கரவாதிகள், தங்கள் குடும்பத்தினருக்காக கடைசியாக குரல் பதிவு ஒன்றை வெளியிடுவர். அவர்கள் வெளியிடும் அந்த பதிவு, பல இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் அமைந்திருக்கும். தற்போது விதிக்கப்பட்டுள்ள தொலைதொடர்பு கட்டுப்பாடுகளால், அதுபோன்ற சம்பவங்களும் நடக்கவே இல்லை.

பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெறும் சண்டையின்போது, நடக்கும் கல்வீச்சு சம்பவங்கள் தற்போது குறைந்துள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.