மஹாமஹோபாத்யாய சந்திரசேகர சிங்க ஹரிசந்தன மஹாபத்ர சமந்தா என்ற பதானி சமந்தா, ஒடிசாவின் கந்தபாடா சமஸ்தானத்தின் பிறந்தார். சமந்தா சிறுவயதிலிருந்தே அடிக்கடி நட்சத்திரங்களைப் பார்த்து, அவற்றைப் பற்றி சிந்திப்பார். அவற்றை ஆராய நவீன கருவிகள் அவருக்கு கிடைக்கவில்லை, எனவே அவர் பூமியிலிருந்து நட்சத்திரங்களின் தூரத்தை அளவிட மூங்கில் குழாயைப் பயன்படுத்தி அவரே தொலைநோக்கி ஒன்றை தயாரித்தார். வானியல் பற்றிய நவீன படிப்புகள் கிடைக்கவில்லை, பண்டைய வானியல் பற்றியும் வானியலாளர்கள் பற்றியும் அறிந்திருக்கவில்லை. ஆனால் சமந்தா சமஸ்கிருதத்தில் தானே தேடித் தேடி இவற்றை படித்தார். அவர் ஒரு சிறந்த கணிதவியலாளரும்கூட. பண்டைய பாரத வானியல் குறித்து ஆராய்ச்சி செய்தார். வெறும் கண்களால் கிரகங்களின் இயக்கத்தை கவனித்தார். எந்த நவீன கருவிகளின் உதவியும் இல்லாமல் வானவியலின் உச்சத்தை எட்டினார். ‘சித்தாந்த தர்பன்’ என்ற புகழ்பெற்ற வானவியல் புத்தகத்தை எழுதினார். சூரிய சித்தாந்தம், கிரகங்கள், சந்திரனின் இயக்கங்களை விண்மீன்களுடன் ஒப்பிடும் முறைகள், கிரகங்களின் விட்டம், கோள்களின் சுற்றுப்பாதைகளைக் கணக்கிடும் விதிகளை அவரது புத்தகங்கள் விவரிக்கின்றன. ஒரு நபர் நினைத்தால், தனது இலக்கை அடைவதை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது என்பதை அவரது வாழ்வு நிரூபிக்கிறது.