நேர்மையின் இலக்கணம்

`ஓமந்தூரார்’ என்று அன்புடன் அழைக்கப்படும் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார், தமிழகத்தின் திண்டிவனத்துக்கு அருகிலிருக்கும் ஓமந்தூர் என்ற ஊரில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர், இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர், காந்தியச் சிந்தனைகளால் காந்தியவாதியாக வாழ்ந்தார். சுதந்திர பாரதத்தில் தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வராகப் பதவியேற்றவர்.

ராஜாஜியும் காமராஜரும் ஓமந்தூராரை முதல்வராக்க முயன்றபோது, ஓமந்தூராரிடம் “இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது” என பதவியை மறுத்தார். நீண்ட வற்புறுத்தலுக்கு பிறகு பகவான் ரமணரிடம் ஆசியும் ஒப்புதலும் பெற்ற பிறகே முதல்வரானார் ஓமந்தூரார்.

`பாகிஸ்தானிலிருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன’ என்று படேலுக்கு எச்சரிக்கை செய்தார். அதன் பின்னர்தான் அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாரதத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது. பட்டியலினத்தவர்கள் ஆலயத்தில் நுழைவதற்கானத் தடையை முழுவதுமாக நீக்கி, திருப்பதி உட்பட பல முக்கியக் கோயில்களில் அவர்களைப் பிரவேசிக்க வைத்தவர் ஓமந்தூரார். திண்டிவனம் பட்டியலின தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார்.

நியாயமான காரணத்துக்காக வருவோரை மட்டுமே சந்திப்பதை, முதலமைச்சராகப் பதவி ஏற்றநாள் முதலே வழக்கமாக்கிக் கொண்டார் அவர். தனிப்பட்ட சலுகைகள், பரிந்துரைகளுக்காக வருவோரை ஓமந்தூரார் சந்திக்க அனுமதிக்கவே மாட்டார். முதல்வராக இருந்தபோது உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசுப் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஓமந்தூரார். `மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சைதான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ எனக்குத் தரக்கூடாது, வெளிநாட்டிலிருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக்கூடாது’ என்றும் நிபந்தனைகளை விதித்த எளிய அரசியல்வாதி அவர். பதவி விலகிய அன்று பிற்பகலிலேயே அரசு மாளிகையிலிருந்து வெளியேறி ஓமந்தூருக்குச் சென்றுவிட்டார். பின், அரசியல் வாழ்வைத் துறந்து, ஆன்மிகத்தில் ஈடுபட்டு, வள்ளலார் வாழ்ந்த வடலூரில் வசித்தார்.